சனி, மே 07, 2011

தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன உத்தமபுத்திரர்களா?
இன்று யாரிடம் போய் தேர்தல் பற்றி பேசினாலும் ஒருவித சலிப்பைக் காணலாம். எங்கங்க எல்லாம் திருட்டுபயல்களா இருக்காங்க, இந்த நிலைமைல யாருக்கு ஓட்டுபோட்டு என்னத்த பண்றதுன்னு.

நிஜமாவே எல்லாருமே திருடர்கள்தானா? ஊழல்வாதிகல்தானா? என்று கட்சி வாரியாக யோசித்தபோது, தூய்மையானவர்கள் என்று எந்த கட்சியிலும் ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை. சரி ரொம்ப வருடங்களா முன்னேற்றமே இல்லாம இருக்கிற கம்யுனிஸ்ட்டுகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது, ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது.

ஆம், என்னுடைய நினைவிற்கு 3 பெயர்கள் வருகிறது.

நல்லகண்ணு
பாலபாரதி
நன்மாறன்

ஏழ்மையான நிலையில்கூட கட்சி தனக்காக வசூல் செய்து குடுத்த 1 கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி குடுத்த பெருந்தன்மை தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. MLA வாக இருந்தும் அரசு பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழத்தெரியாத,குடிசை வீட்டில் வாழ்ந்த நேர்மை நன்மாரனிடம் இருந்தது. போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சொத்துகணக்கை கூட்டி காட்டும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் மத்தியில் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் சொத்து கணக்கு குறைந்த நிலையில் பாலபாரதி இருக்கிறார்.

தமிழக கம்யூனிஸ்டுகள் அனைவருமே நல்லவர்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் உத்தமபுத்திரர்களாகவே இருக்கிறார்கள்.

ஊழலை இந்த அளவு எதிர்க்கும் மக்கள் நியாயமாக கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?

30 கருத்துகள்:

 1. கடந்த முறை மதுரையில் கம்யூனிஸ்ட் சார்பில் எம்.பி-யாக மோகன் இருந்தார்....அவர் எப்போதும் ஸ்கூட்டர்தான் பயன்படுத்துவர்...இன்று வார்டு கவுன்சிலர் கூட சுமோ, ஸ்கார்பியோ என்று பயன்படுத்தும் காலத்தில் இப்படி ஒரு எம்.பி.

  பதிலளிநீக்கு
 2. அதனால்தான் இவர்களை நாடு பிழைக்க தெரியாதவர்கள் என்று கூறுகிறது....

  இவர்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் என்றும் மக்கள் மனதில் நிற்பார்கள்..

  பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. பதிவு இரு முறை வருகிறது என்னவென்று பாருங்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி நண்பர்களே. குறை சரி செய்யப்பட்டது. மீண்டும் வந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்நாட்டுக்கே இந்த மூவர்தான் உத்தம அரசியல்வாதிகள் ....நச்சுனு நல்லவர்களை பற்றிய நல்ல பதிவு..

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாசனி, 07 மே, 2011

  //அவர் எப்போதும் ஸ்கூட்டர்தான் பயன்படுத்துவர்..//

  He used bajaj M80

  He defeated by alagiri in MP election. He died

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் நம் மக்கள் இதை பற்றி யோசிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. கருத்துரையிடுக என்று வேண்டப்படுவதால் எனக்குள்ள ஒரு சந்தேகத்தை உங்கள் முன் வைக்கிறேன். கோபப்படாமல் சிந்தித்து பதிலளிக்கவும்...

  இதே கம்யூனிஸ்டுகள்தானே வங்காளத்தை கடந்த 25 வருடங்களாக ஆண்டு வருகின்றனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக ஊழல்வாதிகளான திராவிட கட்சிகளால் ஆளப்படும் தமிழகம் மருத்துவ பாதுகாப்பிலோ, கல்வி வசதியிலோ, சட்டம் ஒழுங்கிலோ, நீதிபரிபாலனத்திலோ, சாலை வசதிகளிலோ, தொழிற்துறையிலோ, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளிலோ எதிலாவது குறைந்து உள்ளதா?

  மேற்கு வங்காளத்தை விடுங்கள்... கம்யூனிஸ்டுகள் அவ்வப்போது ஆளும்.கேரளாவில்? திரிபுராவில்?

  ஊழல்தான் இங்கு பிரச்னை என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

  http://www.business-standard.com/india/news/parthasarathi-shome-west-bengal-vs-tamil-nadu-/431533/

  பதிலளிநீக்கு
 9. எதிலாவது குறைந்துள்ளதா என்பதை எதிலாவது கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலத்தை விட குறைந்துள்ளதா என்று திருத்தி வாசிக்கவும்...

  பதிலளிநீக்கு
 10. தோழர்கள் என்னவோ நல்லவர்கள்தான்,ஆனால் சேர்க்கைதான் சரியில்லை.இந்த லட்சணத்தில் emergency -ய் வேறு காங்கிரஸ்காரனைவிட உக்கிரமாக ஆதரித்தனர்.அதோடு,isi முத்திரை மாதிரி எல்லோருக்கும் முற்போக்கு,பிற்போக்கு லேபல் வேற குத்தறது.போங்க,அவங்களோட ஒரே தமாஸ் தான்.

  பதிலளிநீக்கு
 11. கம்யூனிஸ்ட்களிடம் பல நல்ல கொள்கைகள் இருக்கு. ஆனா மக்களை அது கவரவில்லை

  பதிலளிநீக்கு
 12. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள்
  திரிபுராவில் 25 ஆண்டுகள்
  கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட்கள் மீது இதுவரை எந்த ஊழலும் இல்லை

  பிரபு ராஜதுறை அவர்களே....//

  மேற்கு வங்கம் நில அமைப்பிலும் எல்லை அமைப்பிலும் பாரிய வேறுபாடு கொண்ட மாநிலம் தமிழ்நாடு போல் அல்ல
  மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வருகிறது தெரியுமா?
  விவசாய உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்கம்
  ஏழைக் களுக்கு நிலங்களை அதிக பகிர்ந்து கொடுத்த மாநிலங்கள் மேற்குவங்கம் கேரளா
  உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 சதவித அதிகாரம் கொடுத்த மாநிலங்கள் இந்த முன்று மட்டும்தான் இதற்காக கேரளாவிற்கு சர்வதேச விருது வழங்கப்ட்டுள்ளது.
  கேரளா 100சதவித எழுத்தறிவு பெற காரணம் யார்
  பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்களுக்காக பேசுகிறவர்கள் யார்
  அரசு பேருந்தில் பயனம் செய்யும் 35 எம்பிகள் யார்
  குறைவான சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார்
  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

  பதிலளிநீக்கு
 13. மிக சிம்பிள் திருவட்டாரு சிபிஎம் எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

  “ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

  ‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

  சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

  ‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

  கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

  “சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

  - கடற்கரய்

  நன்றி : குமுதம் (2.3.2011)

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. சரிதான்,ஆனால் இவர்கள் அவ்வப்போது அணிகள் மாறி மாறி கூட்டு வைத்துக்கொள்ளும் முறையினால் மகளிடம் இவர்கள் மீது அதிக நாட்டம் இல்லாமல் போனது. மேலும் பிற கட்சிகளைப்போல ஊடகங்கள் இவர்களிடம் இல்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் இவர்களை அடையாளம் காண அவைகளை வெளி கொணர வெறும் தினசரியும் தெரு முனை கூட்டங்களும் இப்போது எடுபடவில்லை. அதனால்தான் கேரளாவில் அவர்கள் கைரளி டி.வி யை ஆரம்பித்தார்கள்.

  பதிலளிநீக்கு
 16. இடதுசாரி என்ற அறச்சக்தி

  இடதுசாரி அரசியலின் அடித்தளமாக இருப்பவை இரு பண்புகள். ஒன்று , அரசியலை பொதுச்சேவைக்கான வாய்ப்பாக காணும் நோக்கு. அதற்கான தியாக மனநிலை. இரண்டு, எதையும் அறிவார்ந்து ஆராயக்கூடிய போக்கு. தர்க்கபூர்வமாக சிந்திப்பதும் அதற்கு தேவையான வாசிப்பும்.

  இந்த இரு அம்சங்களும் பிற அரசியல் செயல்பாட்டாளர்களிடம் மிகமிகக் குறைவு. ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை. இந்துத்துவ தரப்பினரில் முதல் பண்புள்ள சிலரை நான் கண்டிருக்கிறேன். இரண்டாவது அம்சம் அவர்களிடம் ஒரு பூச்சாகக்கூட இல்லை. அவர்களை உண்மையில் அறிவார்ந்த போக்குக்கு எதிரான போக்குள்ளவர்கள் என்றே நான் சொல்லத்துணிவேன்.பிற அரசியல் செயல்பாட்டாளர்களில் இந்த இரு கூறுகளுமே இருக்காது. அவர்கள் வெறும் சுயநல மந்தைகள்.

  ஆகவே நம்முடைய பொதுச்சூழலின் தார்மீக சக்தியாகவே இடதுசாரிகள் விளங்கி வருகிறார்கள். நம்முடைய கிராமங்களில் எங்கே ஒரு இடதுசாரி செயல்பாட்டாளன் இருக்கிறானோ அங்கே அடிப்படை தார்மீகத்தின் குரல் ஒலிக்கத்தான் செய்யும். மனித உரிமைகளுக்காகவும் பொருளியல் உரிமைகளுக்காகவும் கிராம அளவில் இடதுசாரிகளின் குரல் தான் முதன்மையானது.

  இந்தியப்பெருநிலத்தில் பெரும்பகுதி இன்னமும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் , நிலப்பிரபுத்துவ மனநிலைக்குள் அழுந்திக்கிடக்கிறது. ஆக்கப்பூர்வமான இடதுசாரி அரசியல் அதை உடைத்து வெளிக்கொணரும் ஆற்றல் கொண்டது. இடதுசாரி அல்லாதவர்களின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அந்த வல்லமை இல்லை. இந்துத்துவர்கள் போன்ற வலதுசாரிகள் இன்னும் பின்னோக்கி அதை கொண்டு செல்லக்கூடியவர்கள்.

  இன்றைய சூழலில் நாம் இதை வெளிப்படையாகவே காணலாம் எந்த ஒரு சமூகப்போராட்டமும் அதில் ஒரு இடதுசாரிப்பங்களிப்பு இல்லையேல் மிக எளிதில் நிலப்பிரபுத்துவ- முதலாளித்துவ சக்திகளால் கடத்திச்செல்லப்படும். அதன் அடிப்படைகள் திரிக்கப்படும். சாதிகளாக திரளும் சமூக இயக்கங்களில் இதை தெளிவாகவே காணலாம். தலித் இயக்கங்களில் கூட.

  நம்முடைய தொழிற்சங்க இயக்கத்திற்கு இடதுசாரிகளின் கொடை மகத்தானது என்று நான் நம்புகிறேன். நில அடிமைமுறை வேரூன்றிய நம் தேசத்தில் இடதுசாரிகளின் தொழிற்சங்கக் கட்டுமானம் மூலமே உழைப்பாளிக்கு அடிப்படை வாழ்க்கையுரிமையும் கௌரவமும் கிடைத்தது. இடதுசாரித் தொழிற்சங்கங்கள் உருவாக்கிய அலை காரணமாகவே எல்லா துறைகளிலும் உழைப்பாளி தன் உழைப்பை ஒரு பொருளாதார சக்தி என உணர்ந்தான். அதை தன் ஆயுதமாக கருத ஆரம்பித்தான்

  இடதுசாரிகள் அல்லாத எல்லா தொழிற்சங்கங்களும் தொழிற்சங்கம் என்ற இலக்கை கைவிட்டு வெற்று அரசியல் நோக்குடன் கட்சிகளின் அடியாட்களாக மருவியவையே. குறிப்பாக இந்துத்துவ தொழிற்சங்கங்களும், திராவிட தொழிற்சங்கங்களும்.

  தொழிற்சங்கங்களுக்கான மூன்று இலக்கணங்கள்

  தொழிலாளர்களை திரட்டுவது
  கற்பிப்பது
  போராடுவது
  மூன்றையும் அவை செய்வதில்லை. மாதாமாதம் சந்தா வாங்க தொழிலாளரை சந்திக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு போனஸ் பணத்தில் வருடாந்தர சந்தா வாங்கக்கூடியவை அவை.

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. நம்மிடம் நல்ல அரசியல் வாதிகளும் உள்ளார்கள் என்பதை உரக்க சொன்னீர்கள்.
  நான் பத்து வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் ஹால்தியாவில் பணிசெய்திருக்கிறேன், விலைவாசி கட்டுக்குள் இருப்பதை பார்த்தேன். எந்தஇடத்திலும் ஜோதிபாசுவின் கட்டவுட் கள் இல்லை. எல்லோருக்கும் துண்டு காணி நிலம் இருந்தது.

  இந்தியாவிலீயே மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலம் மேற்குவங்கம் , பொருளாதார வளர்ச்சியில் தமிழ் நாட்டை விட
  பின்தங்கிய மாநிலம் தான், ஆனால் அங்கு தீண்டாமை கொடுமைகளே இல்லை.
  இருபத்தைந்து ஆண்டுகள் முதல்வராக் இருந்த ஜோதிபாசு மீது ஒரு ஊழல் புகார் இல்லை.

  பதிலளிநீக்கு
 19. அருமையான இடுகை நண்பரே

  வாழ்த்துக்கள் தொடருங்கள் சகோ

  பதிலளிநீக்கு
 20. தங்கள் மீது சலாம் உண்டாவதாக சகோ.சிராஜ்,

  ஒருநாள் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு கிடப்பார் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு..! இன்னொரு நாள் மொட்டைமாடியில் துணிகளை பிழிந்து உதறி கோடியில் காயப்போடுவதையும் கூட நான் கல்கத்தாவில் இருந்தபோது கண்டதுண்டு.

  இங்கு அதுபோன்ற எளிமை கம்யுநிஸ்டுகளிடம் இல்லாவிட்டாலும்... ஏனைய கழக கட்சியினரைவிட பலமடங்கு எளிமை, நேர்மை இவற்றயெல்லாம் கம்யுனிஸ்டுகளிடம்தான் காணலாம்.

  ஆனாலும்,

  //இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?//---இதற்கு உண்மையிலேயே உங்களுக்கு விடை தெரிய வில்லையா சகோ.சிராஜ்..?

  சீரியஸாக உழைத்து நன்றாக நடிக்கும் ஒரு நடிகரை விட சும்மா வந்துபோகும் மொக்கை நடிகர்களைத்தானே தமிழகம் நம்பர் ஒன் ஆக்குகிறது..?

  நடிப்பைவிட கவர்ச்சிகாட்டும் நடிகைகள்தானே எப்போதும் முன்னணியில் இருப்பார்கள் தமிழில்..?

  பறந்து பறந்து நாலு பைட்டு... அஞ்சு குத்து பாட்டு... ஆறு பஞ்ச் டையலாக்... என்ற மசாலா படங்கள் தானே எப்போதும் வெற்றி பெறுகின்றன..?

  உயிரை துச்சமாக மதித்து கஷ்டப்பட்டு உண்மைகளை கண்டுபிடித்து பலமணிநேரம் ஆலோசித்து சிந்தித்து ஆதாரங்களுடன் செய்திகள் போடும் பத்திரிக்கையையா மக்கள் விரும்புகிறார்கள்..? மொக்கைகளைத்தானே..?

  அவ்வளவு ஏன்..?

  இந்த பதிவுலகில்.. என்ன நடக்கிறது..?

  யார் முன்னணியில் இருக்கிறார்கள்..? தமிழ்மண மகுடம் வழங்கப்படும் பதிவுகள் எப்படிப்பட்டவை..?

  நம்மைப்போலத்தானே இருப்பார்கள் நம்மால் தேர்ந்தேடுப்பவர்களும்..?

  சரி... உங்கள் வழி என்ன..?

  அறிவிற்கு புத்தகங்கள் கிடைக்கும் நூலகமா...?

  இல்லையே...

  வடை பஜ்ஜி போடும் டீக்கடைத்தானே..?

  எனினும்... உங்கள் பாதை படிப்போருக்கு சரியான நல்ல மெய்யான கருத்துக்களை சொல்லும் சிறந்த வழியாக இருந்தால்... மிக அதிகமாக மகிழப்போகும் முதல் மனிதன் இந்த பதிவுலகில் நானாகத்தான் இருப்பேன் சகோ.சிராஜ்.

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லாஞாயிறு, 08 மே, 2011

  நல்லகண்ணு
  பாலபாரதி
  நன்மாறன்

  மோகன் -ஐ விட்டுடீங்க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை விடவும் இந்திய கம்யூனிஸ்ட்களில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ..

  நம்ம மக்கள் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதைப் பிடிக்க ஆசைப்படும் கோமாளிகள் ...

  இடது சார், வலது சாரி எனப் பாராமல் கம்யூனிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்திப் பார்க்கலாம் .. கேரளாவோடு சுமுகமாய் பெரியார் நீரையாவது வாங்கித் தருவார்கள்..

  கம்யூனிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்தப் பயப்படுவது எங்கே சென்னை கொல்கத்தா போல நாறிவிடுமோ என்றுதான் - இப்போ மட்டும் என்ன சென்னை சிங்கப்பூராவா இருக்கினு சொல்றீங்களா..

  ஆனால் எனக்கும் ஒரு ஆசை நல்லகண்ணு ஒரு ஐந்தாண்டு முதல்வராய் தமிழகத்தில் இருந்தார்னா.. தமிழகத்தில் பல கரைவேட்டிகளின் கப்ஸாத் தனம் காணாமல் போகும் ........

  பதிலளிநீக்கு
 22. சகோ.சிராஜுதீன்

  ////

  சிராஜுதீன் சொன்னது…
  இன்று அல்லது நாளை என்னுடைய வலைத்தளத்தில் இதுபற்றி எழுத உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பார்க்கவும்
  ////

  ---என்று உங்களின் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.

  அவசியம் நீங்கள் எழுதுங்கள். அதற்கு முன்னர், இந்த வீடியோவை பொறுமையாக செவிமடுத்து முழுமையாக பாரத்து விடுங்கள் சகோ.

  இது ஒரு 200 MB file ..!

  http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE

  பதிலளிநீக்கு
 23. சிராஜீ....
  அழகாகச் சொல்லியிருக்கிரீர்கள்.
  நன் கூட பயந்து போய் ஓடிவந்தேன்.

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லாஞாயிறு, 08 மே, 2011

  நமது கம்யூனிளஸ்டு தோழர்கள் மட்டும் இல்லை என்றால் சோனியா காங்கிரஸ் நமது தேசத்தை என்றோ கூறுபோட்டு விற்றிருப்பார்கள்.நாட்டின் அனைத்து துறைகளிளும் நாம் இன்னமும் சற்று இறையாண்மையோடு இருக்கிறோம் என்றால் அதற்கும் காரணம் நமது கம்யூனிஸ்டு தோழர்களே.
  இந்தியாவில் இது வரையில் ஊழல் நிழல் கூட தொடாத கட்சி கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே.
  இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைய சமுதாயத்திடமே உள்ளது.

  பதிலளிநீக்கு
 25. இவ்வளவு உத்தமபுத்தரர்கள் உள்ள கட்சி ஏம்பா ஒவ்வெரு
  தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் சோரம் போகுது.
  தெரியலைனா வினவு தளத்த பாருங்க .தெரிஞ்சுக்குவீங்க

  பதிலளிநீக்கு
 26. இடதுசாரிகளின் பங்களிப்பு
  -
  ஊழலுக்கெதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் இடதுசாரி கட்சிகள் குரல் கொடுத்து வருவதோடு மட்டுமல்ல, 1996 தேவகவுடா ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு முன் நிபந்தனையாக லோக்பால் சட்டத்தை இடதுசாரிகள் முன்வைத்ததையும், 2004 தேர்தல் முடிந்ததும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தபோது குறைந்தபட்ச செயல் திட்டத்தில் லோக்பால் சட்டம் பற்றிய பாராவை அவர்கள் சேர்க்க வைத்ததையும் ஊடகங்கள் மக்களுக்கு சொல்வதில்லை. உயர்மட்ட ஊழலற்ற ஆட்சி நடத்த முடியும் என்பதை நடைமுறையிலேயே மூன்று மாநிலங்களில் நிரூபித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. ஊழலுக்கு அப்பாற்பட்ட முதல்வர்களாக நரேந்திர மோடியையும், நிதிஷ் குமாரையும் குறிப்பிடுவார்கள். அந்தப் பட்டியலில் மறந்தும் புத்ததேவையும், அச்சுதானந்தனையும் சேர்க்க மாட்டார்கள். காரணம் வெளிப்படையானது. பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அவை இடதுசாரிகளின் செல்வாக்கு எந்த விதத்தில் வளர்வதையும் விரும்புவதில்லை. ஊடகங்களைத் தாண்டிய செய்திகள் மக்களுக்கு அதிகம் போய்ச் சேருவதில்லை என்பதால் மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் இடதுசாரிகளின் பங்களிப்பு பற்றி அதிகம் தெரிவதில்லை.

  பதிலளிநீக்கு
 27. திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி என் மனம் கவர்ந்தவர்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters