போலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 04, 2013

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

எனக்கு நன்கு தெரியும்... இந்த மருத்துமனையிலிருந்து உயிரோடு நான் திரும்பி வந்தாலும் என்னுடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர  முடியாது என்று... என் இளமை கால வசந்தம் அன்றிரவுடன்  முடிந்துவிட்டதை தெரிந்தே வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கை முடக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை!

அந்த கொடிய இரவை நினைத்து பல வருடங்கள் எனக்கு தூக்கம் வராது. இனி இரவுகளை பார்க்கும் நேரமெல்லாம் அந்த கொடிய விஷயமே என் நினைவில் வந்து நிற்கும்!  ஆண்களை கண்டால் என்னை அறியாமல் என்னுடல் அலர்ஜியால் துடிதுடிக்கும்! இத்தனைக்கும் ஏன்?....  என்  தந்தையோ சகோதரனோ  மீதும் வெறுப்பு கலந்த சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்!  என் சக தோழிகளை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் முட்டும், என்னை பரிதாபமாக பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் மரணமே என் பக்கம் வந்ததுபோல் உணர்வு வரும். என் கனவுகள் ஆறு பேரால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும் இது தான் என் நிலை!

லேசான எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்தாலும்  அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கும்.  சாதாரண மாத்திரைகளுமே பக்கவிளைவை ஏற்படுத்தும் எனும் போது  என் உச்சந்தலை முதல் கருப்பை வரை  தாக்கப்பட்ட வலி ஆறு மாதத்திற்குள் நின்றுவிடாது என்பதை  உங்களால் உணர முடிகிறதா? நிச்சயம் எனக்கு தெரியும்...   இனி வீல் சேரும், சிறிய அறையுமே என் தோழி.. என் சுயதேவைகள் அனைத்தும் இனி என் அன்னையின் உதவியால் மட்டுமே முடியும்... சாகும் வரை இந்த வேதனைகளும் வலிகளும் சுமக்க போவது நான் மட்டுமே...

எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின்  விடுதலை எதிர்நோக்கி!

ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டால்....

பரிதாபம் கொண்டு இந்த மருத்துவச்செலவை ஏற்கிறது அரசு... மருத்துவமனை விட்டு நான் சென்ற பின்??? ஊடகங்களும் போராட்டக்காரர்களும் அடங்கிய பின்?
ஆனால்,
என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த விஷ ஜந்துக்களுக்கு இன்றும் என்றும் ஆயுள்தண்டனை என்ற பெயரில் அரசின் செலவில் இனிதாய் வாழ்க்கை கழிக்கும்! நிச்சயமாய் சில நாட்கள் குற்ற உணர்வு அவர்களை தொற்றிக்கொள்ளும்... ஆனால் நிரந்தரமல்ல... என் அவலநிலை மட்டும் நான் சாகும் வரை நிரந்தரமே...


இரக்கமற்றவர்களின் இருப்பு கம்பி அடியால் தலையில் பலத்த அடி வாங்கிய போதும், என்னை  காப்பாற்ற அந்த ஆறுபேருடன் போராடி தோற்ற போதும்,   கொசு கடிபட்டாலே பதறிப்போகும் போகும் என் மெல்லிய  தோல், வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்   பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உராய்வு ஏற்பட்டு ரத்தத்தால் சிவப்புச்சாயம்  பூசப்பட்ட போதும்  ,  கூடியவர்களுக்கு முன் நிர்வாணமாய் நான் காட்சியளித்த  போதும்  என் உயிர் என்னுடலில் ஒட்டியிருந்ததற்கும் இல்லை... இல்லை...  வலுகட்டாயமாய் தைரியம் வரவழைத்து உயிரை பிடித்து வைத்திருந்ததற்கும்  ஒரே காரணம் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே! மனதில் இருந்த ஒரே  எண்ணம் இவர்களை  தண்டிக்க வேண்டும் என்பதே! நான் கண் விழித்ததும் எதிர்பார்த்ததும் அதுவே! 

பாறைக்கு கண் இருந்தாலும்  அன்றிரவு என்னை பார்த்து அன்று அழுதிருக்கும்... 

கேட்போரையும்  கதறச்செய்யும் எனக்கிழைக்கப்பட்ட கொடுமை பார்த்த பின்னும் காமவெறியர்களை திருந்த வாய்ப்பு கொடுக்கச்சொல்லும் சமூகம்... சிரிப்பு மட்டுமே வருகிறதெனக்கு...

 எறும்புகடித்தால் அதை நசுக்கி கொல்லாமல், கையை விட்டு மெல்லமாய் அப்புறப்படுத்துகிறதா   அவர்களின்  பகுத்தறிவு ? 

 வீட்டில் பாம்பு நுழைந்தால் அதை அடிக்காமல் ,  இரக்கப்பட்டு , மன்னித்து, மெல்லமாய்  எடுத்து வெளியே அனுப்பிவிடுகிறதா அவர்களின் மனிதாபிமானம்?

ஆம் எனில், நானும் அவர்களுடன் கைகோர்க்கிறேன்... ஹா..ஹா..ஹா... சிறுகடிக்கே அறிவற்ற உயிரியை கொல்லதுணியும் நாம், நல்ல மனநிலையில்,  வேண்டுமென்றே ஒரு பெண்ணை சித்ரவதை  செய்த கேடுகெட்டவர்களை மன்னித்துவிடவேண்டுமா? தாராளமாக மன்னிக்கட்டும்..... அவர்கள்  வீட்டு பெண்ணுக்கு இந்த அலங்கோல நிலை ஏற்படும்போது!
 
மன்னிப்பார்கள் எனில் ...
அவர்களும்  திருந்தக்கூடும் எனில் ... 
அவர்களை திருத்தியதால் அனைத்தும் சரியாகிவிட்டதா?  இனி உருவாகிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் காமவெறியர்களை  எப்படி திருத்தப்போகிறார்கள்... "தைரியமா கற்பழி! மனிதாபிமானம் கொண்ட சட்டம் உன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் "  என்றா???   


கேட்டுக்கொள்ளுங்கள்.... அந்த ஆறு பேரை விடவும் கேவலமானவர்கள் இவர்களே...!!!
குறித்துக் கொள்ளுங்கள்... எனக்கு நடந்தது போல் இனி நடக்கபோகும் அனைத்து கொடிய நிகழ்வுக்கும்  பொறுப்புத்தாரி  இவர்கள் மட்டுமே!
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... இல்லையேல் நாளை உங்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இதே நிலையே!!!!


என் விதியை நிச்சயம் மாற்றியமைக்க முடியாது... ஆனாலும் மற்ற பெண்கள் இந்நிலையை அடையாதிருக்க, சிறந்த வழியை என்னை பார்த்த பின்பாவது ஏற்படுத்திகொடுக்கட்டும் இவ்வரசு! ஆணாதிக்கத்தை தீயிழிட்டு பொசுக்க இன்றேனும் சந்தர்ப்பத்தை உருவாக்கட்டும் இவ்வரசு!



*********************

ஆக்கம் - ஆமினா முஹம்மத்


புதன், ஜனவரி 04, 2012

ஊழல் செய்யும் ஜூனியர் ஹஸாரேக்கள்...

                                                                                                                                
2011 ஆம் ஆண்டு போராட்டங்களுக்கான ஆண்டு. உலக அளவில் பல அரசுகளை ஆட்டம் காணச் செய்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவும் இதற்க்கு விதி விலக்கல்ல. அவற்றுள் அன்னா ஹஸாரே நடாத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போராட்டத்தில் கூட்டம்  கூட்டமாக பொது மக்களும், எதிர் கட்சிகளும், இளைஞர்கள்  மற்றும் பொது நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுள் IT , BPO மற்றும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு குறுப்பிடத்தக்கது. ஈமெயில், Facebook , Twitter , Utube , SMS மற்றும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மிகப் பெரிய அளவில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
ஆனால் இவர்களின் நேர்மை குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் வெளி வேஷம் போடும் போலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏன் அவ்வாறு தோன்றுகிறது. இதோ காரணங்கள்...
IT , BPO மற்றும் இதர தனியார் நிறுவங்களில் பணி புரிவோரில் பெரும்பாலானவர்களுக்கு  இலட்சங்களில் தான் வருடச் சம்பளம். இவர்களின் சம்பளம் BASIC , HRA , LTA , மெடிக்கல் allowance , போனஸ் என்று பல வகையாக பிரிக்கப் பட்டிருக்கும்.
HRA - House Rent Allowance
LTA - Leave  Travel Allowance
இந்திய அரசின் வருமான வரி விதிப்படி ஒரு வருடத்திற்கு 1 ,80 ,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும். பெண்கள் என்றால் 1 ,90 ,௦௦௦ ரூபாய். இது தவிர மேலும் சில வரி விலக்குகள் உள்ளன.
 
உதாரணம் - 1 : வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் வாடகைப் பணத்திற்கு (அதிக பட்சம் HRA ல் குறிப்பிடப் பட்ட தொகை) வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இதற்க்கு வாடகை செலுத்தியதர்க்கான ரசீதை அரசுக்கு காண்பிக்க வேண்டும்.
 
உதாரணம் - 2  : வருடத்திற்கு 15 ,000  ரூபாய்க்கு மெடிக்கல் பில்களை காட்டி வரி விலக்கு பெறலாம்.
உதாரணம் - 3   : LTA . இதன்படி வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன்(தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள்) எங்காவது வெளி ஊர் சென்றிருந்தால் அதற்க்கான இரயில் டிக்கெட் அல்லது விமான டிக்கெட் அல்லது வாடகை வாகன பில்லை காட்டி 24,௦௦௦ ருபாய் அல்லது 36 ,௦௦௦ க்கு வரி விலக்கு பெறலாம்.
இவை தவிர இன்னும் சில வழிகள் உள்ளன. நாம் இவை மூன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
                                                 
நமது ஜூனியர் ஹஷாரேக்கள் இந்த இடங்களில் விளையாடுவார்கள் பாருங்கள் விளையாட்டு. அப்பப்பா.... அதை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை சகோ.
ஒருவர் சொந்த வீட்டில் இருப்பார், ஆனால் வாடகை வீட்டில் இருப்பது போல் காட்டி, இவரே ஒரு போலி  ரஷீத் தயாரித்து HRA பணத்திற்கு வரி விலக்கு பெற்றுவிடுவார். அல்லது வாடகை வீட்டில் இருப்பார், அதற்க்கு வாடகையாக 3 ஆயிரம் மட்டுமே கொடுப்பார், ஆனால் அவரின் HRA 12 ,000 ரூபாயாக இருக்கும். எனவே தலைவர் இதுக்கும் ஒரு போலி பில் கொடுத்து 144000 ரூபாய்க்கு (12000 X 12 ) வரி விலக்கு பெற்றுவிடுவார்.
அடுத்தது LTA , அந்த வருடம் குடும்பத்துடன் எந்த ஊருக்கும்  பயணம் செய்து இருக்க மாட்டார் அல்லது கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு மட்டுமே சென்று இருப்பார். ஆனால் மும்பை, டெல்லி, சிம்லா மற்றும் காஷ்மீர் போனது போல் போலி பில் கொடுத்து (அப்பொழுதுதானே நிறைய பில் வரும்) வரி விலக்கு பெற்று விடுவார்.
போலி LTA பில் கொடுக்கவென்றே ஒவ்வொரு IT மற்றும் BPO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் வெளியே போலி travel ஏஜெண்டுகள் காத்துக் கிடப்பார்கள்.
அடுத்தது மெடிக்கல் பில், தலைவர்களிடம் 6000  ரூபாய்க்கான பில்கள் தான் இருக்கும், மீதி 9000 ரூபாய்க்கு ஏதாவது ஒரு மெடிக்கல் கடையில் கொஞ்சம் பணம்(லஞ்சம்) கொடுத்து போலி பில் வாங்கி வரி விலக்கு பெற்றுவிடுவார்கள்.
நான் அவதானித்த வகையில் 95 % பேர் இப்படிதான் செய்கிறார்கள். இந்த 95 % த்தில் 95 % பேர் அன்னா ஹஸாரே யின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மிகக் கடுமையாக ஆதரிக்கிறார்கள். எப்பொழுதும் அதைப் பற்றியே பேசுகிறார்கள். எவ்வளவு பெரிய முரண் இது? எவ்வளவு பெரிய மோசடி இது?
ஐயா ஜூனியர் ஹஷாரேக்களே, நீங்க பண்றதும் ஊழல் தான். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அளவில் ஆயிரங்களில் அரசை ஏமாற்றுகிறீர்கள். அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப கொள்ளை அடிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தயவு செய்து நீங்கள் உத்தமர்கள் போன்று பேசும் பேச்சை நிறுத்துங்கள். நீங்களும் பிராடுகள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இல்லை... இல்லை... நான் உண்மையிலே ஊழலை எதிர்க்கிறேன்னு சொன்னீங்கன்னா. நடந்து முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், இனி வரும் காலங்களில் போலி ஆவணங்கள் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் இலஞ்சம் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை மதித்து நடக்க உறுதி எடுக்க முடியுமா? அப்படி எடுத்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதில் உறுதியாக  இருக்க முடியுமா?
2011 - 2012 க்கான வருமான வரி சான்றுகள் கொடுக்கும் நேரம் வந்து விட்டது. சரியான ஆதாரங்களை மட்டும் வழங்குங்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்களை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அப்படி இல்லை என்றால், உத்தமர்கள் பேசும் உங்கள் வாய்ச் சவுடால்களை நிறுத்துங்கள். பாவம் ஊழலுக்கு எதிராக உண்மையாக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு கெட்ட பெயர் வராமலாவது இருக்கும்.
போங்கயா நீங்களும்.... உங்க நேர்மையும்... உங்க ஊழலுக்கு எதிரான போராட்டமும்....

டிஸ்கி : நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன். இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters