பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 05, 2013

மரணத் தருவாயில் ஒரு உயிர் - உதவமுடியுமா???

கடந்த 21.08.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில், வேலூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரின் மூன்று மகன்களுக்கும் இரண்டு கிட்னிகளும் செயல்இழுந்து, அதில் முதல் இருவருக்கும் பலத்த கஷ்டங்களுக்கு இடையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதையும். 17 வயதே ஆன கடைசி மகன் யாசின் அவர்கள் 400 டயாலிஸ்களை கடந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருப்பதையும் விளக்கி கட்டுரை வந்திருந்தது.
கட்டுரையை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் : http://vadaibajji.blogspot.in/2013/09/blog-post_5.html

அதை நானும் படித்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.. வருத்தம் மட்டும் பட்டுவிட்டு மறந்துவிட்டேன். ஆனால், அந்த கட்டுரை வந்து ஒரு வாரம் கழித்து பதிவர் ஹுஸைனம்மா அவர்கள் எங்கள் குழுமத்திற்கு பின்வரும் இரண்டு வரிகளை எழுதி அதன் கீழ் அந்த கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து இருந்தார்கள்...

// அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வார விகடனில் வந்திருக்கு. ஏதாவது செய்யமுடியுமா?  பள்ளிவாசல்களின் மூலம் தர்மம் பெற்றே இதுவரை சமாளிக்கிறார்களாம்.
//

மெயில் இழை மெல்ல சூடுபிடித்தது. சுவனப்பிரியன் தான் ஒரு தொகை தருவதாக ஆரம்பித்தார். அதன்பின் ஒரு பதிவர் சகோதரி 10,000 தருவதாக கூறினார். கூறியதோடு அல்லாமல் நான் அவர்களிடம் நேரடியாகத்தான் சென்று கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.     நான் நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிட்றேன் ன்னு எவ்வளவோ சொல்லியும் அவர் நான் போயே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். மேலும் அவர் 10,000 தருவதாக கூறியதும் சற்றே ஆர்வம் பிறந்தது. உடனே எங்கள் பேஸ்புக் குழுமத்தில் ஸ்டேடஸ் போட்டோம். எல்லா புகழும் இறைவனுக்கே. வரிசையாக சில சகோக்கள் பணம் தருவதாக அறிவித்தார்கள்.... மொத்தம் 19,000 சேர்ந்தது, அத்துடன் இஸ்லாமிய பதிவர்கள் மற்ற சகோதரர்களுடன் இணைந்து நடத்தும் எங்கள் குழுமத்தின் டிரஸ்டில் இருந்து 6,000(இது விநோதினிக்காக வசூல் செய்தது, மொத்தம் 11,000 வசூல் செய்தோம், கொடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார், ஆகவே வேறு யாருக்கும் கொடுக்கலாம் என்று ஹோல்ட் செய்திருந்தோம்) சேர்த்து மொத்தம் 25,000 கொடுப்பது என்று முடிவு செய்து கடந்த திங்கள் அன்று அவர்களை பார்க்க சென்னை செம்மஞ்சேரியில் இருக்கும் சுனாமி குடியிருப்புக்கு நான் மற்றும் சகோதரர் பாசில் இருவரும் சென்றோம்.


                                               (3 சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை)

(வெள்ளை சட்டை போட்டு இருப்பவர் 2வது பையன், காபிகலர் சட்டை போட்டிருப்பவர் முதல் பையன், கீழே அமர்ந்து இருப்பவர் தான் யாஸின், சிகிச்சைக்கு காத்திருப்பவர்)

அந்த குடும்பத்தாரின் நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.10 X 10 வீட்டில் அந்த மூன்று பையன்கள் மற்றும் அவனின் பெற்றோர்கள் வசிக்கிறார்கள். மிகுந்த ஏழ்மையான சூழல். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த அண்ணன்கள் இருவரும் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் யாஸினின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது சகோஸ். எனக்கு உண்மையிலே ரொம்ப பயமா இருக்கு. அந்த பையனுக்கு அரசு மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறார்கள். கிட்னி பெறுவோர் லிஸ்டிலும் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடம். ஆக இவருக்கு ஆபரேஷன் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவருக்கு ஒரு விதமான வைரஸ் தாக்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன் அந்த வைரஸை முற்றிலும் அழித்தால் மட்டுமே அறுவை சிகிச்சை வெற்றி பெறும். இல்லாவிட்டால் அந்த வைரஸ் புதிய கிட்னியையும் செயல் இழக்கச் செய்துவிடும். இதான் இப்ப பிரச்சனை.

இந்த வைரஸை ஒழிக்க வாரம் ஒரு ஊசி வீதம் 6 மாதங்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். ஒரு ஊசியின் விலை 15,000 ரூபாய். ஆறு மாதம் என்பது அதிக பட்சம். சில சமயங்களில் 3 மாதங்களில் கூட சரி ஆகலாம். எதுவும் நம் கையில் இல்லை. இந்த ஊசி போட பணம் இல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். யாசின் மிகவும் ஒல்லியாகவும், வீக்காகவும் இருக்கிறார். அவரை பார்க்கும் சக்தி நிஜமாவே எங்களுக்கு இல்லை. என்னால் தொடர்ந்து அவரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் இடை இடையில் அவர் எங்களைப் பார்த்த பார்வை... அல்லாஹ்... எப்படி சொல்றதுன்னு தெரியல.. எதாவது செய்ங்க பாய் னு சொல்ற மாதிரி இருந்துச்சு...

இறுதியாக கிளம்பும் முன்... கடந்த மார்ச் மாதம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூத்த அண்ணன்(இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்திருக்கிறார்), தனது பழைய பயோட்டேட்டாவை எடுத்து படபடப்பாக என்னிடம் கொடுத்துக் கொண்டே எதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க பாய். என் தம்பிய நான் காப்பத்தனும்னு சொல்லைல என் ஈரக்கொலை அப்டியே மேல தூக்கிறுச்சு. எப்படி ரீஆக்ட் பண்றதுன்னே தெரியல. ஸ்தம்பிச்சிட்டோம். அதன் பின் மெல்ல சுதாரிச்சி இப்ப தான் உங்களுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சி இருக்கு, இப்ப எந்த ரிஸ்கும் எடுக்காதீங்க தம்பி, மறுபடியும் உங்களுக்கு பிரச்சனைன்னா டபுள் வொர்க் ஆகிடும். நீங்க ரெஸ்ட் எடுங்க, இப்பதைக்கு இந்த பணத்த வச்சி 2 வாரம் ஊசிய போடுங்க. இறைவன நம்பி இறங்குங்க, இவ்வளவு காப்பாத்தின அவன் உங்கள் தம்பியையும் காப்பாத்துவான். இன்னும் சில சகோதரர்கள் தர்றேன்னு சொல்லி இருக்காங்க, வந்ததும் அதையும் அனுப்புறோம், எல்லார்கிட்டையும் சொல்றோம். உங்களுக்கு தேவையான பணம் நிச்சயம் கிடைக்கும்னு சொல்லிட்டு விடை பெற்றோம்.

சகோதர்களே, நண்பர்களே...

உங்களால் முடிந்தால், முடிந்த அளவு இவர்களுக்கு உதவுங்கள். வாழ வேண்டிய பையன். 17 வயது தான் ஆகிறது. நமது சிறு சிறு உதவிகள் பெரும் வெள்ளமாய் அந்த குடும்பத்திற்கு உதவட்டும். இத்துடன் அவர்களின் போன் நம்பர் மற்றும் பேங்க் டீடெய்ல் இணைத்துள்ளேன்.

இஸ்லாமிய சகோஸ்...

உங்களின் 2.5 % ஜகாத் பணத்தை இவர்களுக்காக செலவழியுங்கள். ஜகாத் பெற தகுதி உடையவர்கள் லிஸ்டில் இவர்கள் நிச்சயம் வருவார்கள். இதற்கு நான் சாட்சி. உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்கள் ஊர் செல்வந்தர்களிடம் சொல்லி வாங்கி கொடுங்கள்... சிம்பிள் சகோஸ்... ஒரு ஊசி செலவை நான் வசூலிப்பேன் என்று உறுதி எடுத்து செய்யுங்கள்...நிச்சயம் உங்களால் முடியும்.. முடிந்த அளவு அவர்களின் சுமையை குறைக்க முயற்சிப்போம். நம்மால் இதைச் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

இறுதியாக :


2 பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்தாலே நம்மால் சமாளிக்க முடிவதில்லை. 3 பிள்ளைகளுக்கும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக அலைந்து திரிந்து போராடும் அந்த ஏழைப்பெற்றோர்களையும், இவர்களுக்கு பல விதங்களில் உதவிய அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், இவர்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையையும், பண உதவி செய்த மற்றும் இறைவனிடம் வேண்டிய அனைத்து நல் உள்ளங்களையும் நினைக்கையில் மனிதம் சாகவில்லை என்பது நிரூபணமாகிறது.

இறைவா!! இவர்கள் அனைவருக்கும் உன் அருளை பரிபூரணமாக இறக்கு. மேலும் நீண்ட ஆயுளை கொடுத்து இன்னும் பலருக்கு உதவக் கூடியவர்களாக இவர்களை ஆக்கி வை. எதற்கும் சக்தியற்ற அற்பற்களாய் இருக்கிறோம் இறைவா. எங்களை கை விட்டு விடாதே. யாசினுக்கு நீண்ட ஆயுளைக்கொடு. ஆமீன்.


அட்ரஸ் :

Mr.Abdul Majeeth,
No.1293, Tsunami Kudiiruppu,
Semmanjeri, Cholinganallur, Chennai
Mobile : 80983 74060

பேங்க் டீடெய்ல்ஸ் :

K.N. Abdul Majeeth,
AC No : 800210110004315
Bank of India,

Mylapore Branch, 
Chennai.



திங்கள், ஜனவரி 14, 2013

எதிர்க்குரல் - இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்


சென்னை மக்களை சிலநாட்களுக்கு இலக்கியவியாதிக்கு ஆளாக்கும் புத்தகத்திருவிழா இனிதே தொடங்கிவிட்டது.  அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்த உம்மத் குழுமத்தின்  புதிய முயற்சியான  "எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப் பதிவர்கள்)" புத்தகமும்  திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


                                                                
இந்த புத்தகம் பற்றிய சிறுகுறிப்பு

 முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது இணையத்தில் ஆக்கபூர்வமாக செயலாற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பதிவர்களின் குழுமமான உம்மத் குழுமத்தின்  நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று.     ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூலானது, இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.


                                                    
வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றோம்.  128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 50 ரூபாய் மட்டுமே!

இப்புத்தகம் கிடைக்குமிடங்கள் :


கடையின் பெயர்
கடை எண்
சாஜிதா புக் சென்டர்
522
டிஸ்கவர் புக் பேலஸ்
43 & 44
பஷாரத் பப்ளிகேஷன்ஸ்
52 & 53
மக்கள் சக்தி
406
மலிவு விலை இஸ்லாமிய பதிப்பகம்
66
தமிழ்ச் சோலை பதிப்பகம்
 344 & 345
இளையான்குடி மடல்
92
சமநிலைச் சமுதாயம்
266
அறிவு நாட்றாங்காள் என்ற சொர்கத் தோழி
17


  (மேலும்  பல கடைகளில் விரைவில் கிடைக்கும்... )


குறிப்பு : இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர். கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இறைவன் நாடினால், உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.

சிராஜ்        - +91-994-158-5566   (vadaibajji@googlemail.com)
ஆஷிக்     - +91-978-954-4123   (aashiq.ahamed.14@gmail.com)

வெளிநாடுகளுக்கு : வெளிநாடுகளில் இருந்து கேட்ட சகோஸ் தங்கள் இந்திய முகவரியை அனுப்பினால், அங்கு அனுப்பி விடுகிறோம். அங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது தான் எளிய வழி. ஏனெனில் கூரியரில் அனுப்பினால் செலவு எக்கச்சக்கமாக இருக்கும்.


திங்கள், பிப்ரவரி 06, 2012

பதிவர் சென்னை பித்தனின் மறுபக்கம்....


பிரபல பதிவர் சென்னை பித்தனை, பதிவுலகில் இருக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் பதிவு உண்டு என்று எழுதக்கூடியவர், புதிய பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவர், இத்யாதி இத்யாதி. இது தான் அவரைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்தது. 
அது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் அவர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில விடயங்கள் உண்டு. அவற்றை பொது மேடையில் பேசுவதால் அவர் இதைப்பற்றி தவறாக எண்ணிவிடக் கூடாது**.
                                                       
கடந்த பொங்கல் அன்று, நானும் நண்பன் ரஹீம் கஸாலி அவர்களும் சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றோம். இது  சம்பந்தமாக நண்பன் கஸாலி, "புத்தகக் கண்காட்சியில் நான்" என்ற தலைப்பில் தொடராக எழுதி அனைவரையும் கொலையா  கொண்டதை நாம் அனைவரும் அத்துணை எளிதில் மறந்து விட முடியாது. நிற்க.
நாங்கள் அவருடன் ஒரு 10 அல்லது 15 நிமிடமே பேசி இருப்போம். இது தொடர்பில் சென்னை பித்தன் ஐயா அவர்கள் பதிவிட்டதை போல், நாங்கள் ஒன்றும் பதிவுலகயோ அல்லது மொத்த உலகையோ புரட்டி போடும் விஷயங்கள் பற்றி எல்லாம் பேசவில்லை. நாங்கள் நலம், நீங்கள் நலமா??? என்ற அளவில் தான் பேசினோம். இந்த பதிவு எங்கள் பேச்சு பற்றியோ அல்லது சந்திப்பு பற்றியோ அல்ல. மாறாக அவரது வீட்டில் நான் கவனித்த ஒரு நெகிழ்வான விஷயம் பற்றியது.

ஆம். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவருக்கு அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார்கள். பேச்சின் ஊடாக அவர்கள் யார் என்று கேட்டோம். அதற்க்கு அவர்தான் எனது தாயார், அவருக்கு வயது 93 ஆகிறது. இந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான் இருக்கிறோம், நான் தான் அவரை கவனித்து கொள்கிறேன்  என்று கூறினார். ஒரு நிமிடம் நான் ஆடிப்போய் விட்டேன்.

பெண்டாட்டி, பிள்ளை,, தம்பி தங்கை என்று இருக்கும் பொழுதே இந்த காலத்தில் பெற்ற தாய் தந்தையரை யாரும் கவனிப்பதில்லை. குறிப்பாக நகரம் என்ற நரகத்தில் வாழும் படித்த பொடலங்காய்கள் பொண்டாட்டிக்கு பிடிக்க வில்லை, நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவோம் அதனால் இவர்களை கவனிக்க ஆளில்லை என்று ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி  பெற்ற தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் இந்த காலத்தில், 93 வயது நிரம்பிய தனது தாயை
அவர் ஒருவராக கவனித்துக் கொள்கிறார் என்றால்(சென்னை பித்தனுக்கு வயது 76 , சரியா ஐயா????), அந்த மனிதத்தை என்னவென்று சொல்வது???? அந்த பாசத்தை என்னவென்று சொல்வது????? வார்த்தைகள் இல்லை.

அந்த சந்திப்பிற்கு பின், பல முறை நான் அது பற்றி சிந்தித்தது உண்டு. 76 வயதில் நாம் நமது பெற்றோரை இது போன்று பார்த்துக்கொள்வோமா? ஏன் பெரும்பாலானோரால் .இவரைப்போல் இருக்கு முடியவில்லை? தனது பெற்றோரை புறக்கணிக்கும் கொடூர மனது மனிதனுக்கு எப்படி வருகிறது??? என்று எண்ணற்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.
நாமும் நமது பெற்றோரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதிற்குள்  நினைத்துக்கொண்டேன்.
சென்னை பித்தன் அய்யா!!!! இந்த பொருள்/பணம்  சார்ந்த உலகில், தனி மனிதராக தனது  தாயாரை கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அனைவரும் பாராட்டுக்கு  உரியவர்கள். உங்களில் இருந்து தான், முதியோர் இல்லங்களில் தனது தாய் தந்தையரை விட்டுச் செல்லும் கழிசடைகள் பாடம் படிக்க வேண்டும். இன்று தனது தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் அனாதைகளாக விடும் அனைவரும் நாளை நிச்சயம் அதைவிட கேவலமான நிலையையே அடைவார்கள்.
ஏனெனில், ஆத்திகர்களுக்கு சொல்வதானால், நிச்சயம் இறைவன் அவர்களை தண்டிப்பான். நாத்திகர்களுக்கு அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால்
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு.


உங்கள் தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரில், தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உங்களோடு இருந்தால், அவர்களை ”சீ” என்று கூட கூறாதீர்கள். மேலும், அவர்களை கடிந்து பேசவேண்டாம். மாறாக, அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக.....
அல்குர் ஆன் - 17:23

தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters