பிஜே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஜே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 28, 2013

அண்ணன் பி.ஜே அவர்களுக்கு ஒரு கடிதம்



                                                               

அன்புள்ள அண்ணனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நலமாக இருக்கிறீர்களா??

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், பூரண உடல் சுகத்தையும் தருவானாக. ஆமீன்.

நீங்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர். ஏன்? இந்தியாவிலே மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களை கணக்கிட்டால் நீங்கள் முதல் 5 இடங்களுக்குள் வருவீர்கள்(என்னைப்பொறுத்தவரை). இத்தகைய ஞானத்தை உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

2002 ம் வருடம் என்று நினைக்கிறேன், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஹஸரத்மார்கள் சொன்னதை மட்டும் மார்க்கம் என்று நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது காரைக்குடியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது, பிஜே பேசுகிறார் என்று கூறி ஏறத்தால வற்புறுத்தி இழுத்துச் சென்றான் என் நண்பன் கஸாலி. அன்று தான் உங்கள் உரையை முதன் முதலில் கேட்டேன், முழுமையாகக் கேட்டேன். அல்ஹம்துலில்லாஹ். அவ்வளவு அழகாகப் பேசினீர்கள். அன்று தான் என் மனதில் மாற்றத்திற்கான முதல் விதை விழுந்தது, அது இன்று ஆலமரமாய் வளர்ந்து உங்களுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் வாழும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் நீங்கள். அதில் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் வராது, இன்ஷா அல்லாஹ்.

ஆனால், கடந்த சில நாட்களாக உங்கள் கட்டுரைகளில் சிலவும், உங்கள் பேச்சுக்களில் சிலவும் வரம்பு மீறி இருப்பது போல் தோன்றுகிறது அண்ணன். இது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பாலான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அப்படி தான் தோன்றுகிறது. குறிப்பாக மனுஷபுத்திரனை நீங்கள் "மிருகபுத்திரன்" என்று கூறியதையும், நேற்று விஸ்வரூப எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய சில வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களால் ரசிக்க முடியவில்லை.

எது சொன்னாலும் அதில் குறை காணத் துடிப்பவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நான் இந்த கடிதத்தை எழுதவில்லை. நீங்கள் மிக கண்ணியமாக பேசி இருந்தாலும் அவர்கள் எதிர்க்கவே செய்வார்கள் என்பதை நானறிவேன்.
ஆனால் பொதுவான மாற்று மத சகோதரர்கள் பலர் இருக்கிறார்களே?? அவர்களுக்கும் அல்லவா நீங்கள் சொல்ல வந்த கருத்து போய்ச் சேராமல் ஆகிவிடும். எவ்வளவு அழகான கருத்துக்களை வைத்தீர்கள்?? ஆனால் வார்த்தைகளில் சற்று நிதானம் தவறியதால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்று அஞ்சிகிறேன்... அஞ்சுகிறோம்.

ஏன் இப்படி பேச வேண்டும் என்று கேட்டால், அவர்கள் வரம்பு மீறும் அளவுக்கு நாமும் வரம்பு மீறலாம் என்ற வசனத்தை உதாரணமாக காட்டுகிறார்கள் நம் சகோதரர்கள். ஆனால், வரம்பு மீறுவதை விட மன்னிப்பது சிறந்தது என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.

அண்ணன்... நான் உங்களை மன்னிக்கச் சொல்லவில்லை... தாராளமாக உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஆனால் வார்த்தையில் கண்ணியத்தைப் பேணலாமே??? நீங்கள் வேண்டுமென்றே கண்ணியக்குறைவாக பேசினீர்கள் என்று நாங்கள் கூறவில்லை. அறியாமல் கூட இனி பேச வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் விமர்சனங்களில் இருக்கும் சில வார்த்தைகளை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது அண்ணே... "மிருகபுத்திரன்" என்ற வார்த்தையை கேட்டதும் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் பதறினோம். கமலின் குடும்பத்தை பற்றி நாம் பேச வேண்டியது இல்லையே அண்ணன். அவர் செய்தது நியாயம் இல்லை தான். அதற்காக நாமும் தரம் இறங்கத்தேவை இல்லையே???

அப்படி இறங்கினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??? இவர்களா நமக்கு தீர்ப்பளிக்கப்போகிறார்கள்?? இவை அனைத்தும் தற்காலிகம் தானே?? அதற்கு ஏன் இவ்வளவு கடினமான வார்த்தைகள்?? மென்மையாகவே கூறுவோம். முடிந்தால் புரிந்து கொள்வார்கள், முடியாவிட்டால் அதை இறைவனின் புறத்தில் விட்டுவிடுவோம்.

நீங்கள் சாதாரணமானவர் அல்ல... தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை... உங்களால்  மட்டுமே கொத்து கொத்தாக இளைஞர்களை குரான், ஹதீஸின் பக்கம் கொண்டு வர முடியும்(இறைவன் நாடினால்...).. அந்த வல்லமையை இறைவன் உங்கள் பேச்சிற்கு கொடுத்து உள்ளான்.


அந்த ஆற்றலை இன்னும் வீரியமாக, விவேகமாக பயன்படுத்தி இந்த சமுதாயத்தை நீங்கள் மென்மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இனி தவறிக்கூட உங்கள் வாயில் இருந்தோ அல்லது எழுத்திலோ எந்த சூழ்நிலையிலும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
இதை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சார்பாகவும். பதிவுலகத்தில் இருக்கும் பெரும்பான்மை பதிவர்கள் சார்பாகவும் கேட்கிறோம். உங்கள் அன்புத் தம்பிகளின், தங்கைகளின் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்.

சிராஜுதீன்,
28.01.2013


குறிப்பு : இந்த கடிதம் சகோ பிஜே அவர்களுக்கும் அனுப்பப்படும்.




Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters