செவ்வாய், ஜனவரி 08, 2013

மாணவர்களா??? பலி ஆடுகளா???


செய்தித்தாள்களும், செய்தி சேனல்களும்  அந்த செய்தியை வாசித்த போது மனம் முழுக்க பாரமாகி பல்வேறு சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தது...

பள்ளி நேர மாற்றம்!!!!

வரும் கல்வி ஆண்டு முதல் புத்தகச் சுமையோடு இன்னொரு சுமையாக பள்ளிகள் துவங்கும் நேரத்தை காலை 7.30 க்கு  அரசு மாற்றியுள்ளது....
9.30க்கு துவங்கும் பள்ளிக்கே 8.30க்கு  வீட்டுவாசலில் வேன் வந்து நிற்கும். இனி 7.30 எனில்????????????????????????



9.30  எனில்
7.30  எனில்
காலை 6 மணி :  சமையல் செய்யவேண்டும்.  
காலை 5 மணி: 
சமைக்க
வேண்டும்.
7 மணி: 
மகனை
எழுப்ப வேண்டும்.
5மணி:
தூக்கம்
பற்றாக்குறையால் 5மணிக்கு எழுப்பினாலும் 6மணிக்கு எழுவான்.
7.15 :
சாவகாசமாக
பால் கொடுத்த பின் கொஞ்சம் வெயில் எட்டிபார்த்த பின் சூடான நீரில் குளியல்... அதன் பின் சிறுது நேரம் படிப்பு
6 மணி:
குளியலா
?  இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.முகம் கழுவினால் போதும்
8 மணி:  காலை டிபன் ஊட்டிவிடுதல்
6மணி:
டிபனா
? இப்பதான் பால் குடிச்சான் அதுக்குள்ளையுமா? வேண்டாம்.
8.15 தொடங்கி 8.30 க்குள் : வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்  
6.15 தொடங்கி 6.30க்குள்:இன்னும் கால்  மணி  நேரம் தான் இருக்கு.. வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் 6.30 க்கு வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்
ஸ்கூல் சேரும் ஒருமணி நேரம் வரை   சகமாணவருடன்  விளையாடிக்கொண்டே பயணிக்கிறான்          
காலையில் விட்ட தூக்கத்தை ஒருமணி நேரம் பிடித்துக்கொண்டே பயணிக்கிறான்





  ****சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்  சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து!

   
 கொடுக்கப்பட்ட ஹோம்வொர்க் ,நடத்தப்பட்ட பாடங்களை படிக்கவே நேரம் இரவு 9 முதல் 10 மணிக்கு மேல் ஆகிறது. சாப்பிட்டு தூங்க மட்டுமே குழந்தைகளுக்கு நேரம் இருக்கும்… பெரியவர்களை போல் 8 மணிநேர தூக்கக் கட்டுப்பாடுகள் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது. காலை என்னதான் நாம் கெஞ்சினாலும் "எழ மாட்டேன்" என அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்க  பாவமாக இருந்தாலும் , காலை நேர பரபரப்பில் அடித்து வழுக்கட்டாயமாய் எழுப்புவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே வழி. தூக்க கலக்கத்திலேயே பால் குடித்து, தூக்க கலக்கத்திலேயே முகம் கழுவ மட்டும் தான் நேரமிருக்கும்.

நம் அவசரப்படுத்துதலில் இனி குழந்தைகளுக்கு பள்ளி என்றாலே தீராத வெறுப்பு வரும். காலை நேர உணவு சாப்பிட நேரமிருக்காது, அதையும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பிவிடுவதால் 2 பாக்ஸ், 2 வாட்டர் கேன், ஸ்னேக்ஸ்பாக்ஸ் என கூடுதலாக ஒரு சுமை. வீட்டிலேயே சரியாக சாப்பிடாதவன் அங்கே சாப்பிடுவானா? வீட்டில் என்றால் கொஞ்சமேனும் வயிற்றை நிரப்பி அனுப்ப முடியும். இனி அந்த கவலை வேறு.

வெயில் பிரதேஷத்தில் இருந்தாலும் கூட, பனி/குளிர் இங்கே இல்லை என்ற போதும் கூட  காலை நேர பனி, வாடை காற்றை  தாங்கும் சக்தி குறைவே  இந்த கால குழந்தைகளுக்கு … கால நிலை லேசாக மாறினாலும் தும்மல், சளி என்பது சர்வசாதாரணமாக எட்டிபார்க்கும் நிலையில் , முகத்தில் அடிக்கும் வாடைக்காற்று விடாத இருமலையும் , சளியையும் பரிசாய் கொடுக்கும்! பழகிக்கொள்ளும் வரை சிரமமே...

காலை சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் பாவம் அவனும் குழந்தை தானே…??? எவ்வளவுதான் தாக்கு பிடிக்க முடியும்? தூக்கம் மீண்டும் எட்டிபார்க்கும் மதியவேளையில்… ஆனால் அதற்கும் அனுமதி தரப்படுவதில்லை… மதியத்துடன் விட்டாலும் தேவலை, வீட்டில் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால்  படிப்பு படிப்பு என கசக்கி பிழியும் பள்ளிகள் மதிய நேரத்தை தியாகம் செய்துவிடுமாக்கும்? அப்படியே விட்டாலும் வேலைக்கு செல்லும் அம்மா,அப்பாவை பெற்றிருக்கும் குழந்தைகளின் நிலை அதைவிட பரிதாபம்! 


சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்,   சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து! சீரியல் பார்க்கும் அம்மா இல்லை என்பதாலும் :-) விடிய காலை தொழுகைக்கு எழ பழகிவிட்டதால் இவையெல்லாம் சுமை இல்லை என்ற போதிலும் அனைத்தும் குழந்தைகளை மையமாக வைத்தே சிந்தனை செல்கிறது... இதுவும் பழகிப்போகும் :-) 

ரொம்ப தான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியா படம் காமிச்சுட்டிருக்கேன் போல... சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்!


 உப்புசப்பில்லாத காரணத்தால் நேரமாற்றம்:
சாலைகளில் விபத்து அதிகரிப்பதை தடுக்கத் தான் இந்த நடைமுறையை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது சுத்த முட்டாள்தனம்…  குழந்தைகள் மீது ஏன் இந்த இரக்கமற்ற செயலை திணிக்க வேண்டும்? ஏற்கனவே மின்வெட்டால் தூக்கம் இழந்து  , மன உளைச்சலில் பைத்தியங்களாய் திரியும் மக்களுக்கு இன்னொரு அடியா? விபத்துதான் காரணம் எனில் அதற்கு பல வழிகள் இருக்கும் போது இதனை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம் ??!!!


கொஞ்சம் அறிவோடு சிந்திப்போமா?
மேலை நாடுகளிலும் இதே முறை தான் . இங்கே கொண்டு வருவதில் என்ன தவறு என்ற வாதம் வலுக்கிறது. நியாயம் தான்… ஆனால் அங்கு கல்வியை பார்க்கும்  விதமும் இந்தியாவில்  மாணவர்களை சக்கையாய் பிழியும் கல்விமுறைக்கும் எக்கசக்க வித்தியாசம் உள்ளது.  தன் பள்ளியில் 100 சதவித தேர்ச்சி காட்ட இரவு ஒன்பது மணி வரை பாடாய்படுத்தும் சர்வாதிகார பள்ளி நிலையங்கள் மதியத்துடன் ஓய்வை கொடுப்பார்கள் என்பதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (சட்டமா?  கிழிஞ்சது… சமச்சீர் புத்தகத்தையே  சும்மா ஷோவுக்கு தான் கொடுத்திருக்கோம்.. இதுல மட்டும் உங்க மதியத்துடன் பள்ளி முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை பாலோ பண்ணுவோமாக்கும்?) மதியத்துடன்  மாணவர்களுக்கு ஓய்வு விட்டால் மட்டுமே இந்த சட்டம் சரியானதாக இருக்க முடியும்!

விபத்து நடப்பது அனைவரும் ஒரே நேரத்தில் வருவதால் என  யோசிக்கும் அரசு ஏன்  எல்லாரின் நேரத்தை மாற்றியமைக்க கூடாது?
வழக்கம் போல் 9.30க்கே (கூட வேண்டாம் 8.30க்கு) குழந்தைகளுக்கு பள்ளி திறந்துவிட்டு, தனியார்/பொதுதுறையில் வேலை செய்பவர்களின்  நேரத்தை 11 மணிக்கு மாற்றிவிடலாமே?

கூட்ட நெரிசலால் படிகட்டுகளில் தொங்கும் நிலை ஏற்படுவதால் விபத்து அதிகரிக்கிறது எனில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் வேன் அல்லது பஸ் வசதி செய்து கொடுக்கலாமே?? 
பணம் பறிக்கும் தனியார்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பள்ளி வேனிலே சென்று வந்து விடுகிறார்கள். எத்தனையோ இலவசங்களை வாரி வழங்க தயாராக இருக்கும் அரசாங்கம் , அரசுபள்ளிக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் நிச்சயம் சிரமமே இருக்காது. இது நீண்ட கால திட்டமும் கிடையாது… மாணவர் நலனில் உண்மையிலே அக்கறை இருந்தால், உடனே செயல்படுத்திவிட முடிந்த விஷயமே… 

இது தவிர காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.  சில கிராமங்களுக்கு  சாயங்காலம் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முட்டி மோதி போகும் சூழல் இருக்கிறது. லாபம் பார்க்காமல்  சேவை அடிப்படையில் கிராமப்ப்புறங்களுக்கு கூடுதல் பஸ்வசதியை  ஏற்படுத்தி கொடுத்தால் , இது இல்லையென்றாலும் அடுத்து பேருந்து வரும் என மாணவர்களும் இருந்துவிடுவாங்க…

எல்லாத்தை விடவும் முக்கியமா , சுத்தி சுத்தி வளைக்காம தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்துங்க… தொங்கும் நிலை அறவே இருக்காது, விபத்தும் ஏற்படாது!

இதெல்லாம்விட்டுட்டு நேரத்தை மாத்துறாங்களாம்….??? என்னதான் யோசிக்கிறாங்களோ…???  யார் தான் ஐடியா கொடுக்குறாங்களோ??? 

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் இது போன்ற அறிவிப்புகளை விடுத்து, அறிவாய் யோசித்து  மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம், ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம் தமிழக அரசு!

அரசு பரிசீலிக்குமா?????? 

*******************
 

ஆக்கம்- ஆமினா முஹம்மத்


33 கருத்துகள்:

  1. சலாம் சகோ.ஆமினா... அவசரமான நேரத்தில் அவசியமான பதிவு. மிக்க நன்றி சகோ..! பாவம் தாய்மார்கள் & பிள்ளைகள் நிலை..! அதுபற்றி எல்லாம் யாருக்கு கவலை..!? ஹூம்..! தமிழனின் தலை விதி.!

    பள்ளி நேரத்தில் அதிக பேருந்துகளை இயக்கி படியில் தொங்கி மாணவர் பலியாகும் பிரச்சினைக்கு தீர்வு காண வக்கில்லை. வந்துவிட்டார்கள்.... முட்டாள்த்தனமான முடிவுகளோடு..!

    காலையில் & மாலையில் (பீக் அவர்ஸில்) மட்டும் தனியாருக்காவது பேருந்து கான்ட்ராக்ட் விட்டால்... தீர்வுக்கு தீர்வும் ஆச்சு... பினாமியில் கான்ட்ராக்ட் எடுத்து சம்பாதிச்ச மாதிரியும் ஆச்சு..!

    இதைக்கூடவா இனி மக்கள் சொல்லி தரனும்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்கும் சலாம்...

      //பள்ளி நேரத்தில் அதிக பேருந்துகளை இயக்கி படியில் தொங்கி மாணவர் பலியாகும் பிரச்சினைக்கு தீர்வு காண வக்கில்லை. வந்துவிட்டார்கள்.... முட்டாள்த்தனமான முடிவுகளோடு..! //

      ம்ம்... தன் முந்தைய ஆட்சிகாலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் இது... ஏனோ மாற்றியமைத்த பின் இப்போது மீண்டும் சப்பை கட்டு கட்டி இப்போது வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள்...

      இன்னும் சில காலம் போனால் (நம்மில் தொலைநோக்கு பார்வை,திட்டம் தான் இல்லையே) இன்னும் நெரிசல் பெருகும்... அப்படியென்றால் பள்ளி நேரத்தை விடியகாலை 4 மணிக்கு வைப்பார்கள் போலும் :-)

      //இதைக்கூடவா இனி மக்கள் சொல்லி தரனும்..?//
      நாம் மட்டுமே தான் சிந்திக்கிறோம் போல :-)

      வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  2. ஆசிரியைகள் பற்றியும் கவலை படணும்.அவர்களுக்கும் பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருக்குமே.அனைத்து வேலைகளையும் முடித்து அவர்களும் கூடவே கிளம்பணுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆசிரியைகள் பற்றியும் கவலை படணும்.அவர்களுக்கும் பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருக்குமே.அனைத்து வேலைகளையும் முடித்து அவர்களும் கூடவே கிளம்பணுமே.//

      நீங்க டீச்சர்ன்னு அப்பப்ப நிரூபிக்கிறீங்க :-) செம பாய்ன்ட்....

      நீக்கு
  3. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஏற்கனவே இந்த டைமில் தான் செயல்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே டைம் எனில் மதியத்துடன் பள்ளி முடிந்துவிடுமா?

      எனக்கு தெரிந்து தனியார் பள்ளிகளிலும் காலையில் சீக்கிரமே வரச்சொல்லிடுறாங்க (க்ளாஸ் டெஸ்ட்க்காக).... சாயங்காலம் வரை ஸ்கூலில் டியூசன் (கட்டாயம்) நடத்திடுறாங்க... பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பு எனில் 9 மணி வரைக்கும் கூட பாடம் நடத்துகிறார்கள்...

      நீக்கு
    2. ஆமாம்.மதியம் 2 மணிக்கு பள்ளி முடிந்து விடும்.

      நீக்கு
  4. என்னத்த சொல்ல....பாவம் நம்ம பிள்ளைங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சிவா... ஏற்கனவே மனப்பாடம் பண்ணும் மிஷின்களாகிட்டாங்க... இனி பள்ளிக்கூடம் என்றாலே வெறுப்பு தான் தோன்றும்... சரியான முறையில் சட்டத்தை நிறைவேற்றினால் ஒழிய நம் குழந்தைகளுக்கு இது ஒரு சுமை தான்!

      நீக்கு
  5. நல்ல பதிவு... காலையில் சீக்கிரம் பள்ளி, மதியம் கண்டிப்பா கிடையாது என்று சொன்னால் கூட ஓக்கே... ஆனா இங்க மதியமும் வைப்பாங்க... சாயந்தரம் டியூசன் வைப்பாங்க...

    மொத்தத்தில் மாணவர்கள் தான் பலி ஆடு....

    பதிலளிநீக்கு
  6. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக சகோ

    மிக அவசியமான பதிவு...யதார்த்தமா எழுதி இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  7. உங்க கருத்தில் சற்று மாறுபடுகிறேன் ஆமினா. அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம். ஆமா, இந்த டீக்கடையை மொத்தமாவே குத்தகைக்கு எடுத்துகிட்டீங்களா? குட்டி சுவர்க்கத்தை என்ன செஞ்சீங்க? :-))

    1. ஒரே நேரத்தில் கூடுதல் பஸ்கள் அல்லது அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாய வேன் அல்லது பஸ் வசதியோ இயக்கப்பட்டால், சாலைகளில் ட்ராஃபிக் ஜாம் அதிகமாகி, நெரிசலும், தாமதமும் அதிகமாகும். ஏற்கனவே இருக்கும் நெரிசலே தாங்கமுடியாம இருக்கு.

    2. தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் வைப்பது, நம்ம ஊருக்கு ஒத்துவரும்னு தோணலை. ஏன்னா, பேருந்தின் இருக்கை கொள்ளளவுக்கு மட்டுமே ஆட்களை ஏற்றும்போதுதான் தானியங்கி கதவு பயன்படும். மேலும், இருக்கும் பேருந்துகளே ஓட்டை, உடைசலாக “குடைக்குள் மழை”யாக இருக்கும்போது, இத மட்டும் உடனே செஞ்சிடுவாங்களா என்ன? ரிப்பேராகக் கிடக்கும் பேருந்துகளைச் சரி செய்தாலே, ஓரளவு கூட்டம் குறையும்.

    3. 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குத்தான் காலை சீக்கிரம் எழுந்திரிக்க சிரமமாக இருக்கும். காலை சீக்கிரம் ஆரம்பிக்கும் பள்ளி மதியமும் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதால், அவர்களுக்கு விட்ட தூக்கத்தை மதியம் தூங்கிக் கொள்ளலாம். மேலும், காலை சீக்கிரம் எழவேண்டும் என்பதால், இரவு சீக்கிரம் தூங்கும் பழக்கம் கண்டிப்பாக வரும்.

    மேலும், 6 வயதிலிருந்து தொழச் செய்வதால், ஃபஜ்ருக்கு எழுவதால், பழகிவிடும்.

    4. பெரிய மாணவர்களுக்கு இதொன்றும் சிரமமில்லை. மேலும், ஏற்கனவே டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் என்று ஏதாவதொன்றிற்காக அவர்கள் சீக்கிரம் எழுந்து செல்லத்தான் செய்வார்கள். இல்லையெனினும், அதிகாலை எழும் பழக்கம் நல்லதே.

    பாத்திமா (ரலி) அவர்களை அண்ணலார் (ஸல்) தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.(பைஹகீ)

    அதிகாலை எழுந்து, இஷாவோடு உறங்குவதே இஸ்லாமிய வழிமுறை. ஆகவே, இது நல்லதே. நீங்கள் சொன்னதுபோல, ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பின்னர், பழகிவிடும்.

    திருநெல்வேலியில் சென்ற வருடம் முதல் (என்று நினைக்கிறேன்), பேருந்து நெரிசலைக் குறைப்பதற்காக இதுபோல பள்ளி நேரத்தை 8-3 ஆக மாற்றி இருக்கிறார்கள். நல்ல பலன் இருப்பதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் சொன்னார்.

    பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் அரசு பேருந்துகளுக்கு மட்டுமே என்பதால்தான், அதிக நெரிசல் இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடுகளும் யோசிக்கலாம். (தனியார் பேருந்து/வேன்களில் ஏறினால் கட்டணத்தை அரசிடம் பெற்றுக்கொள்ளும்படியான டோக்கன் சிஸ்டம் போன்றவை.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ.ஹுசைனம்மா.........

      ///ஒரே நேரத்தில் கூடுதல் பஸ்கள் அல்லது அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாய வேன் அல்லது பஸ் வசதியோ இயக்கப்பட்டால், சாலைகளில் ட்ராஃபிக் ஜாம் அதிகமாகி, நெரிசலும், தாமதமும் அதிகமாகும். ஏற்கனவே இருக்கும் நெரிசலே தாங்கமுடியாம இருக்கு.///

      -----------இது தமிழ்நாட்டின் எல்லா ஊரிலுமா.... இல்லை மாநகரங்களில் மட்டுமா..? படிகளில் நின்று தொங்கி விழும் அசம்பாவிதம் நடப்பது மாநகரில் மட்டுமா தமிழகமெங்குமா..? விபத்தில் சிக்குவோரில் கல்லூரி /மேல்நிலை மாணவர்கள் மட்டுமா அல்லது ஒன்னாம் வகுப்பு மாணவரும் உண்டா..?

      ஏன் கேட்கிறேன் என்றால் சட்டம் தமிழமேங்கும்... துவக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை என்பதால்..!

      -----------டிராபிக்தான் கூடுதல் பேருந்து இயக்க முடியாமைக்கு காரணம் என்றால் அதை டிராப்பிக்கை களைவது எப்படி என்றுதானே அரசு சிந்திக்க வேண்டும்..?

      நான் பார்த்த வரையில்... சென்னை போன்ற பெருநகரில் டிராபிக் ஜாமூக்கு காரணமே எண்ணமுடியாத எண்ணிக்கையில் மிகுந்து விட்ட பைக்குகள் தான்..!

      எட்டு பேர் எட்டு பைக்கில் செல்லும் அதே இடத்தில், ஒரு பேருந்து 80 பேருடன் செல்ல முடியும்..! அந்த பேருந்து அதே சாலையின் இணையாக செல்லும் பக்கக்து வீதிகளில் செல்ல முடியாது. என்வே... பீக் அவர்சில் பைக்குகள் சாலையில் சென்றால் அபராதம் விதித்து சாலைக்கு இணையான வீதிகள் வழியே செல்ல வைக்கலாமே..! அப்கோர்ஸ்... சென்னை சாலைகளை விட வீதிகளில் டிராபிக் குறைவுதான். குறுகிய சாலையை இன்னும் அகலப்படுத்தலாமே..? சரக்குந்து போன்றவைகளை தடம் மாற்றி விடலாமே..?

      ///காலை சீக்கிரம் ஆரம்பிக்கும் பள்ளி மதியமும் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதால்///

      ---------------நான் இணையத்தில் தேடியவரை முடியும் நேரம் எங்குமே அறிவிக்கப்படவில்லை..! எனவே அதே நேரம் என்றே கருதுகிறேன். நீங்கள் எங்கிருந்து இத்தகவலை பெற்றீர்கள் சகோ.ஹுசைனம்மா.

      ///அதிகாலை எழும் பழக்கம் நல்லதே.///------------ஆமாம். ஆமாம். இதை யாரும் எதிர்க்கவில்லை சகோ. பள்ளி / கல்லூரி /ஆஃபீஸ் விடுமுறை நாள் என்றாலும் தொழ எழுபவர்கள் பஜ்ரில் எழுவார்கள். தொழுவார்கள்..! அது அல்லவே சகோ இங்கே பிரச்சினை. ஷ்ஷ்ஷ்ஷ்... 'நல்ல பழக்கம்'னு சத்தமா வேற சொல்லிட்டீங்க..! அவங்க காதிலே விழுந்து இனி, எல்லாருடைய ஆஃபீஸ் டயத்தையும் இனி, பள்ளி கல்லூரி புதிய டயத்துக்கே மாத்திர போறாங்க..! அ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ

      நீக்கு
    2. // அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம். ஆமா, இந்த டீக்கடையை மொத்தமாவே குத்தகைக்கு எடுத்துகிட்டீங்களா? குட்டி சுவர்க்கத்தை என்ன செஞ்சீங்க? :-))//

      அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க ஹுசைனம்மா... அந்தா மேலே இருக்கு பாருங்க கருப்பு கலர் பேனரு! அத வைக்கிறதுக்கு உதவின்னு கேட்டு வந்தாரு... சரின்னி அட்மின் ஆகி சில பல மாற்றங்கள் செய்து கொடுத்தேனா.... இதுக்கு மேல என் சோக கதையை சொன்னா அழுவாச்சி அழுவாச்சியா தான் வரும்.. நீங்களே பிப்ல் பண்ணிக்கோங்க :-)

      சுருக்கமா சொல்லணும்னா- என் சேவை டீக்கடைக்கு தேவைன்னு கெஞ்சி கதறி (ஹி..ஹி..ஹி..) கேட்டுக்கொள்ளப்பட்டதால் இங்கே குப்பைகொட்டிட்டிருக்கேன்!!! குட்டிசுவர்க்கத்தில் வழக்கம் போல் உலகபிரதிபெற்ற பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும் :-)

      நீக்கு

    3. ஒரே நேரத்தில் கூடுதல் பஸ்கள் அல்லது அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாய வேன் அல்லது பஸ் வசதியோ இயக்கப்பட்டால், //

      இப்படி இயக்கப்படும் போது தனியே ஏற்பாடு செய்து பைக்கில் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்... சிட்டிசன் சொன்ன அதே பாய்ன்ட் தான்!

      // ஏற்கனவே இருக்கும் நெரிசலே தாங்கமுடியாம இருக்கு.//
      அதற்கு தொலைநோக்கு திட்டம் தான் தேவை! மாணவர்களின் மீது திணிப்பு சட்டம் அல்ல!

      நான் சொன்ன எல்லா பாய்ன்ட்களும் ஒரு சேர சட்டமாக கொண்டு வந்தால்..... என கற்பனை செய்து பாருங்க..

      அனைவருக்கும் கட்டாய வேன் வசதி, தானியங்கி கதவு, பெரியவர்களுக்கான வேலை நேர மாற்றம் இவை அனைத்தும் ஒருங்கே கொண்டு வந்தால் எளிதாய் கிடைத்துவிடும் தீர்வு!

      //2. தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் வைப்பது, நம்ம ஊருக்கு ஒத்துவரும்னு தோணலை. ஏன்னா, பேருந்தின் இருக்கை கொள்ளளவுக்கு மட்டுமே ஆட்களை ஏற்றும்போதுதான் தானியங்கி கதவு பயன்படும்.//
      அப்படியென்றால் அரசு தொங்குபவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதை பற்றி கவலைக்கொள்ள கூடாது :-) இதுக்காகதான் நேரத்தை மாத்துறேன்னா அதுக்குள்ள விஷயத்தை தானே சரிபண்ணனும்... இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் இப்படியே அரசு மெத்தனப்போக்கை காட்டபோகிறது? படியில் தொங்கிக்கொண்டு போகிறவர்கள் மாணவர்கள் மட்டுமா என்ன? :-)

      //6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குத்தான் காலை சீக்கிரம் எழுந்திரிக்க சிரமமாக இருக்கும். காலை சீக்கிரம் ஆரம்பிக்கும் பள்ளி மதியமும் சீக்கிரமே முடிந்துவிடும் என்பதால், அவர்களுக்கு விட்ட தூக்கத்தை மதியம் தூங்கிக் கொள்ளலாம். மேலும், காலை சீக்கிரம் எழவேண்டும் என்பதால், இரவு சீக்கிரம் தூங்கும் பழக்கம் கண்டிப்பாக வரும். //
      இது தான் என் கவலையே... போன முறையும் இதே போல் மதியத்துடன் விட்டார்கள் தான்... எனக்கு செம ஜாலியா இருக்கும்! என்னுடன் படிக்கும் ரஞ்சித் என்ற மாணவன் பள்ளி மைதானத்திலேயே ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டு 5 மணிக்கு வீட்டுக்குச் செல்வான்... காரணம் அப்பா அம்மா வேலைக்கு செல்வதால்...

      அப்போதைக்கு வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவு! இப்ப ஹவுஸ்வைப் பார்ப்பது தான் குறைவு :-) இது சிக்கலான சூழ்நிலை... கூட்டுகுடும்ப முறை 99 சதவீதம் ஒழிந்துவிட்ட தருணத்தில் பள்ளி விட்டாலும் பள்ளியிலோ, வாசலிலோ காத்திருக்கும் நிலை உண்டாகலாம் (மாற்று ஏற்பாடு எத்தனை பெற்றோரால் செய்துகொடுக்க முடியும்?)

      சீக்கிரம் தூங்கிவிடுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது... காலை முதல் சாயங்காலம் வரை அவர்கள் பள்ளியிலேயே நேரத்தை கழிக்கிறாங்க, வீட்டுக்கு வந்ததும் டியூசன் என 8 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு தூங்க தான் நேரமிருக்கும்(அயர்வு)... இப்ப இருக்கும் குழந்தைகள் சீக்கிரமே தூங்கி காலையில் அம்மா அப்பாக்களின் வற்புறுத்தலால் அதிகாலை எழுந்து படிப்பவர்களாகத் தான் இருக்காங்க!

      மேலும் என் கவலை பதிவில் குறிப்பிட்டது போல் //மதியத்துடன் விட்டாலும் தேவலை, வீட்டில் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால் படிப்பு படிப்பு என கசக்கி பிழியும் பள்ளிகள் மதிய நேரத்தை தியாகம் செய்துவிடுமாக்கும்? // 100 சதவீத தேர்ச்சி காட்ட இரவு வரைக்கும் பாடம் நடத்தும் பள்ளிகள் எங்கள் ஊரிலும் கூட சர்வசாதரணாமாகிவிட்டது! மதியத்துடன் பள்ளியை முடிப்பார்களா என்பதும் சந்தேகமே! :-)

      //அதிகாலை எழுந்து, இஷாவோடு உறங்குவதே இஸ்லாமிய வழிமுறை. ஆகவே, இது நல்லதே. நீங்கள் சொன்னதுபோல, ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பின்னர், பழகிவிடும். //
      ஆம்... இது சட்டமாக்கினால் வேறு வழியே இல்லை! சில நாட்களுக்கு மட்டும் பல்லை கடித்து பொருமைக்கொள்ள வேண்டும்...

      //
      பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் அரசு பேருந்துகளுக்கு மட்டுமே என்பதால்தான், அதிக நெரிசல் இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடுகளும் யோசிக்கலாம். (தனியார் பேருந்து/வேன்களில் ஏறினால் கட்டணத்தை அரசிடம் பெற்றுக்கொள்ளும்படியான டோக்கன் சிஸ்டம் போன்றவை.)//
      நல்ல ஆலோசணை!

      வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

      நீக்கு
  8. ஒரு எந்திரத்தனமான வாழ்க்கையை நாம் பழகுவது மட்டுமல்லாது நம் சந்ததிகளுக்கும் பழக்கிவிட வைக்கும் முறை இது. நம் இளமைக்கால நிகழ்வுகளை நம் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாவிட்டாலும் இருக்கிற கொஞ்ச மழலைப்பருவத்தையாவது நிம்மதியாக கழிக்க அனுமதிக்கலாம் என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க சசிக்கலா...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  9. yen late ah aarambikalaame sikirame 10 maniku maalai 5 mani varai vakalaame ellana govt bus vidattume studentsku. enna solringa akka?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... நீங்க பக்கா ஸ்டூடென்டுன்னு நிரூபிச்சுட்டீங்க :-)

      நீக்கு
  10. சரியான நேரத்தில் அருமையான பகிர்வு. 7.30 மணி என்பது ரொம்ப சிரமமான ஒன்று தான். போக போக பழகும் என்றாலும் சின்ன குழந்தைகளுக்கு அதிக அதிக கஷ்டம் தான். நீங்கள் சொல்லுவது போல் கொஞ்சம் அறிவோடு சிந்தித்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்..அரசு பரிசீலிக்குமா??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பாயிஷா... இது கூடுதல் சிரமம் தான்! சாதகத்தை விட பாதகமான விஷயங்களே அதிகம் என எண்ணத்தோன்றுகிறது!

      //அரசு பரிசீலிக்குமா?????? //
      நம்புவோம் :-)

      வருகைக்கு நன்றி பா

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நீக்கிட்டீங்க... நல்ல கருத்தை தானே சொன்னீங்க...

      நீக்கு
  12. பைக்குகளைத் தடை செய்யலாம். அது மிக நல்லதே, ஏனெனில் நிறைய விபத்துகளுக்கு பைக்குகளும் காரணம். அதே சமயம், தடை செய்யப்பட்டதால், அத்தனை பைக்-காளர்களும் பேருந்தை நாடுகிறார்கள் என்றால்.. நெரிசல் மேலும் கூடுமே தவிர, குறையாது.

    (நடந்த விபத்திலும், சரக்கு லாரிகள் பகற்பொழுதில் நகரில் தடைசெய்யப்படாததே காரணம் என்கிறார்கள். அதுவும் சரி செய்யப்பட வேண்டும்).

    தனியார் அலுவலகங்கள் ஏற்கனவே சீக்கிரமேதான் தொடங்கும். 10 மணிக்கு ஆரம்பிக்கும் அரசு அலுவலகங்க்ளின் நேரத்தையும் முற்படுத்தலாம். இது உடனே செய்யக்கூடியது. எனினும் இதுவும் பள்ளி நேரத்தோடு க்ளாஷ் ஆகும்.

    சாலைகளை அகலப்படுத்துவது நீண்ட காலத் திட்டம். உடன் பலன் தருவது, “ஷிஃப்ட்” முறையில் பள்ளி, அலுவலகம் செயல்பட வைப்பதே.

    பள்ளிகள் காலையில் சீக்கிரமே தொடங்குகிறது என்றால், மாலையில் சீக்கிரமே முடிந்துவிடும் என்றுதான் அர்த்தம். நெல்லை நகரப்பள்ளிகளில் முன்பு 9.30-4.30 இருந்தது தற்போது 8-3 ஆக மாற்றி இருக்கிறார்கள்.

    தனியார் பள்ளிகளில் ஏற்கனவே 10, 11,12 வகுப்புகள் மட்டும் அதிகநேரம் இயங்குகிறார்கள். (நாகர்கோயிலில் 6 am - 7 pm). மற்ற வகுப்புகள், வழக்கமான நேரம்தான் என்றாலும், ஆட்டோ/வேனின் “ஷிஃப்ட்” காரணமாக அல்லது நீண்ட தூரம் காரணமாகவோ ஒன்றாம் வகுப்பு மாணவர்களானாலும் சீக்கிரமேதான் கிளம்புகிறார்கள். பள்ளிக்கு அருகில் வசிப்பவர்கள்தான் லேட்டாகக் கிளம்ப முடிகிறது.

    பல தனியார் கல்லூரிகளில் ஏற்கனவே “ஷிஃப்ட்” முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. (ஈவினிங் காலேஜுக்காக)

    எந்தத் திட்டம் என்றாலும், ஒருசில பிரச்னைகள் வரத்தான் செய்யும். மற்றபடி, என் பார்வையில் இது நல்ல திட்டமாகவே படுகிறது. என்னைப் பொறுத்தவரை, பேருந்து நெரிசல் பிரச்னையில் அரசு செயல்படவே இல்லாமற் போகாமல், ஏதோ இந்த நடவடிக்கையாவது எடுத்தார்களே என்றுதான் மகிழ்வேன்.

    சாலை விரிவாக்கம், அதிகப் பேருந்துகள், வாகன முறைப்படுத்துதல், அருகாமை பள்ளி திட்டம், பஸ் பாஸ்-டோக்கன் சிஸ்டம், அலுவலக நேரம் மாற்றம் - இதெல்லாம் வந்தா உங்களோடு நானும் மகிழ்வேன். இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ////பள்ளிகள் காலையில் சீக்கிரமே தொடங்குகிறது என்றால், மாலையில் சீக்கிரமே முடிந்துவிடும் என்றுதான் அர்த்தம்////

      ------------எனது மகள் படிக்கும் பள்ளியில் விசாரித்து... சற்றுமுன் பதிலும் வந்து விட்டது சகோ.ஹுசைனம்மா.

      7:30 AM to 2:00 PM எனில், அதிக பளு இல்லைதான்.

      "மதியம் வீட்டில் வந்து சூடான சோறு குழம்பு கூட்டு பொரியல் போட்டு நல்ல சாப்பாடு சாப்பிடவும் பின்னர் மாலையில் சற்று விளையாடவும் இரவில் சீக்கிரம் தூங்கவும்... ரொம்ப நல்லதுதான் இந்த டைமிங்" என்று எனது மனைவி சொன்னார்.

      "ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் காலை வேலைகளை இனி அஞ்சு மணிக்கு பஜ்ரில் இருந்தே செய்ய வேண்டி இருக்கும். போக போக இதுவும் பழகிரும்" என்கிறார் அவர்.

      அவரவருக்கு அவரவர் வசதி..! :-)

      நீக்கு
    2. //பைக்குகளைத் தடை செய்யலாம். அது மிக நல்லதே //

      என்னாது?? பைக்க தடை பண்ணனுமா?? அப்ப நாங்க எப்படி ஆபிஸ் போறது...??? தனி நபர்கள் காரில் செல்வதைத்தான் தடை செய்ய வேண்டும்... இப்பைலாம் கார் பூல்லிங் என்ற சிஸ்டம் வந்துவிட்டது... 4 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் வருவது.. இதை கட்டாயம் ஆக்கினால் பாதிக்கு மேல் ட்ராபிக் குறையும்.. அத விட்டுட்டு பைக்க தடை பண்றாங்களாமாம்...

      நீக்கு
  13. Blaming students without improving the infrastructure is very bad governance.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // Blaming students without improving the infrastructure is very bad governance. //

      துரை.. இப்பைலாம் தமிழ்ல பேசுறதே இல்ல.. பாண்ட் பிரச்சனையா???

      நீக்கு
  14. மதியத்தோட கடையை சாரி...ஸ்கூல் முடியுதுன்னா ஓக்கேதானே... என் பையன் 7 மணிக்கு போய்ட்டு 3 மணிக்கு வர்றான்பா.....(அவனுடைய டைமிங் 8 - 2) வின்டரில் காலையில் எழுப்புவதற்கே பாவமாக இருக்கும்... என்ன பண்றது??? :(... இங்கயும் ரொம்ப ட்ராபிக்காக இருக்கிறது புது tunnel ஓபன் பண்ணியிருக்காங்க...நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு.......

    பதிலளிநீக்கு
  15. பள்ளிக்களுக்கு காலை 7,30 மணிக்கு திறப்பது வர வேற்றதக்காக திட்டம். குழந்தைகளை விடிய காலை எந்திறிக்க வைப்பாது. இரவில் பத்து மணிக்கே தூங்க வைப்பாது நல்ல பழக்கங்கள். இப்ப இருக்கிறா சமுக நிலையை கொஞ்சம் கொஞ்சம் மாறுவது வேதனை அழிக்கிறது. 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு செல்ல 30 நிமிடங்கள் எடுக்கிறது. கூட்ட நெரிசல் இல்லம்மால் இருக்கும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரம் முன்பே இருந்தால் அவர்களை பள்ளியில் வண்டியில் கொண்டு போய் விட்டு விட்டு நம் அலுவலகங்களுக்கு காலதமதம் ஆகமால் செல்லாம். பெட்ரோல் விற்கிற விலைக்கு மீச்சம்.

    அதே போல் 10 மணிக்கு மேல் சினிமா தியேட்டர்களும். டாஸ்மார்க்குகள் இயங்க்ககூடாது மற்றும் 11 மணிமுதல் காலை 3.00 மணிவரை ரோட்டில் தகுந்த காரணம் இல்லம்மால் நடமாடக்கூடாது என்றும் சட்டம் போட வேண்டும், நாட்டில் பாதி குற்றங்கள் குறையும்.

    பதிலளிநீக்கு
  16. பிரதர் சிராஜ்,
    உங்க பல்சர் பில்லியனில் வரும்போதுதான் எனக்கு இந்த ஞானோதயமே உதிர்த்தது...! :-)

    எட்டு பைக் காரங்களை காலி பண்ணினால் எம்பது பேரு கொண்ட பஸ் அங்கே போகலாம் என்றால்..... இரண்டு காரை காலி பண்ணினால்... இன்னொரு எம்பது பேர் கொண்ட பஸ்ஸை அதே ரோட்டில் விடலாம்தான்..! பைக்குக்கே அந்த நிலை என்றால்... காருக்கும்தான்..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters