வியாழன், செப்டம்பர் 05, 2013

சிறுகச் சிறுக செத்துப் பிழைத்தோம்...

குறிப்பு : இந்த போஸ்ட் ஆனந்த விகடனில் இருந்து அப்படியே காப்பி செய்யப்பட்டது... இது தொடர்பான மற்றொரு போஸ்டிற்கு மேலதிக விளக்கம் தரவே இங்கு பதியப் படுகிறது...

வேலூர் அருகே சிறு கிராமத்தில் மகிழ்ச்சியாக வசித்தஏழைக் குடும்பம் ஒன்றை, 'அல்போர்ட் சிண்ட் ரோம்’ என்ற மரபுவழி சிறுநீரகக் குறைபாடு, சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஒண்டுக்குடித்தனத்தில் சுருட்டிப் போட்டுள்ளது!
வேலூர் மாவட்டம், அகரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்- ரெஜினா பேகம் தம்பதிக்கு... அஸ்லாம் பாஷா, அன்வர், யாசின் என்று மூன்று மகன்கள். மூன்று பேருமே 'அல் போர்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் சீறுநீரகக் குறைபாட்டுக்கு உள்ளாகியி ருக்கிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூவரும் பிழைக்க முடியும் என்கிற நிலையில், மூத்த மகன்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சையை பெரும்பாடுபட்டு முடித்துவிட்டார் அப்துல் மஜீத். இப்போது, கடைசி மகனின் சிறுநீரக சிகிச் சைக்காகக் காத்திருக்கிறார். மகன்கள் பிழைத்துக்கிடப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு நிமிடத்தையும்  செலவழிக்கும் அப்துல் மஜீத், தங்கள் குடும்பத்தைப் பற்றிய சோகக்கதையைச் சொல்லத்  தொடங்கினார். 
''கிராமத்தில் காய்கறி வியாபாரம் பார்த்தேன். சைக்கிள்ல சுத்திச் சுத்தி வித்தா... ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபா வரும். கஷ்ட ஜீவனம். ஆனாலும்,  பசங்களை நல்லபடியா படிக்கவெச்சேன். மூணு வருஷம் முன்னாடி திடீர்னு ரெண்டாவது பையன் அன்வ ருக்கு உடம்புக்கு சுகம் இல் லாமப்போச்சு. கைகால், முகம் எல்லாம் வீங்கிரும். ரத்த ரத்தமா வாந்தி எடுப்பான். அப்பப்போ மயங்கி விழுவான். 'வயித்துல உப்பு அதிகமாகிருச்சு. சென்னையில இருக்கிற பெரிய கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைச் சுட்டுப் போங்க. பையனைக் காப்பாத்திடலாம்’னு சொன் னாங்க.
சென்னைக்கு அழைச்சுட்டு வந்தா, 'பையனுக்கு ரெண்டு கிட்னியும் செயல் இழந்திருச்சு. கிட்னி மாத்துனாதான் பிழைக்கவைக்க முடியும்’னு சொல்லிட்டாங்க. தொடர்ந்து ஆறு மாசம், வாரம் ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணோம். அப்புறம் என்னோட கிட்னியை எடுத்து அன்வருக்குப் பொருத்தினாங்க!'' என்று சட்டை யைத் தூக்கி, தான் அறுவைசிகிச்சை செய்துகொண்ட அடையாளத்தைக் காட்டிவிட்டுத் தொடர்கிறார்.
''அன்வருக்குச் சிகிச்சை செய்த  செலவைச் சமாளிக்கிறதுக்காக, மூத்தவன் திருப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்தான். அன்வருக்கு கிட்னி பொருத்துன பிறகு, நம்ம குடும்பத்தைப் பிடிச்ச கஷ்டம் வில குச்சுனு நினைச்சு கொஞ்சம் நிம்மதி ஆனோம். ஆனா, அப்பத்தான் இடி மேல இடி விழுந்திச்சு!'' என்று அப்துல் நிறுத்த, அவருடைய மூத்த மகன் அஸ்லாம் பாஷா தொடர்கிறார்.
''தம்பியைப் பார்த்துட்டு வரலாம்னு திருப்பூர்லேர்ந்து சென் னைக்கு ரயில்ல வந்துட்டு இருந் தேன். ஆனா, சென்னைக்கு உயிரோட போய்ச் சேருவோமானு  நினைக்கிற மாதிரி, ரயில்ல என் நிலைமை ரொம்ப மோசமாயிருச்சு. பரிசோதிச்சுப் பார்த்தா, எனக்கும் அதே பிரச்னை. உடனே சிறுநீரகத்தை மாத்தணும்னு சொல்லிட்டாங்க. 'இது ஏதோ பரம்பரை வியாதி மாதிரி தெரியுது. எதுக்கும் உங்க தம்பியையும் பரிசோதிச்சுப் பார்த்துடலாம்’னு சொல்லி, யாசி னுக்கும் டெஸ்ட் பண்ணாங்க. அவனுக்கும் அதே பிரச்னை. அடி மேல அடி!  இன்னமே சொந்தக் கிராமத்துல குடியிருக்க முடியாதுனு முடிவு பண்ணி, செம்மஞ்சேரி சுனாமி குடி யிருப்புல ஆயிரம் ரூபா வாடகைக்கு குடிவந்தோம். ஆனா, அந்த வீட்டுக்கு வேஸ்ட்டா வாடகைக் கொடுத்துட்டு இருக் கோம். மொத்தக் குடும்பமும் ஆஸ்பத்திரியில தானே தங்கியிருக்கோம். எப்ப ஊருக்குப் போவோம்னு இப்போ வரைக்கும் தெரியவே இல்லை!'' என்று வெறுமையாகச் சிரிக்கும் அஸ்லாம், பி.ஏ., பொருளாதாரப் படிப்பில்  கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்தவர். 
மகன்களின் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார் ரெஜினா பேகம். ''அஸ்லாமுக்கு என் கிட்னியை எடுத்துக்கங்கனு சொன்னேன். ஆனா, 'ஒரே குடும்பத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் சிறுநீரக தானம் செய்ய முடி யாது’னு சட்டமே இருக்காமே! அதனால அஸ்லாம், யாசின் ரெண்டு பேருக்கும் சிறு நீரக தானத்துக்காக பதிஞ்சுவெச்சுட்டு, டயாலிசிஸ் பண்ணிட்டே இருந்தோம். இந்த டயாலிசிஸ், மருந்து மாத்திரை செலவுகளுக்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. வாரத்துக்கு ரெண்டு தடவை டயா லிசிஸ் பண்ணணும். பெரியவனுக்கு ஒரு தடவை பண்ண 900 ரூபாய். சின்னவனுக்கு 1,770 ரூபாய். இது தவிர, ஒரு ஊசி 500 ரூபாய். எட்டு டயாலிசிஸுக்கு ஒரு தடவை மாத்துற கிட் 1,100 ரூபாய். மூணு மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு யூனிட் ரத்தம்னு டயாலி சிஸுக்கே இதுவரைக்கும் ஏழெட்டு லட்சம் செலவாயிட்டு. அவ்வளவு செலவையும் பல பேரோட நிதி உதவி மூலமாத்தான் சமாளிச் சோம்!'' என்று நெகிழ்கிறார் ரெஜினா.
சென்ற மார்ச் மாதம் மூளைச் சாவுஅடைந்த குருசாமி என்பவரின் கிட்னியை அஸ்லா முக்குப் பொருத்தியுள்ளார்கள். தற்போது யாசின் மட்டும் தனக்கான அறுவைசிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ''2010-ல இருந்து நானும் அண்ணனும் டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கோம். அன்வருக்கு 46 டயாலிசிஸுக்கு அப்புறம் கிட்னி கிடைச்சிருச்சு. பெரிய அண்ணனுக்கு 250-ஐ தாண்டி ஓடுச்சு. எனக்கு வெற்றிகரமா 400 டயாலிசிஸ் தாண்டி ஓடிட்டு இருக்கு!'' என்று சொல்லும் யாசின், மேலும் தொடர்ந்தார்.
''கிட்னி தானம் கேட்டுப் பதிவுசெய்தவர் கள்ல  சீனியாரிட்டி அடிப்படையில் நான் தான் ஃபர்ஸ்ட். அதனால எப்பவோ எனக்கு சிறுநீரகம் கிடைச்சிருக்கும். ஆனா, திடீர்னு என்னை மஞ்சள் காமாலை தாக்கிட்டு.  எங்க குடும்பத்துல யாருக்குமே மஞ்சள் காமாலை வந்தது இல்லை. ஒரு தடவை தனியார் ஆஸ்பத்திரியில டயாலிசிஸ் பண்றப்ப, சரியா சுத்தம் பண்ணாத உபகரணங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. அதனால எனக்கு வைரஸ் கிருமி தொத்திட்டு. என் உடம்புல அந்தக் கிருமி பரவி 20 லட்சமா பெருகிடுச் சாம். அதனால, ஒவ்வொரு தடவை டயாலிசிஸ் பண்றப் பவும் அந்தக் கிருமிங்க அழியுறதுக்காக, ஒரு ஊசி போட்டுட்டு இருக்காங்க. அதோட விலை, வெளி மார்க்கெட்ல ஒரு லட்சம் ரூபாய். அந்தக் கிருமிங்களை ஒட்டுமொத்தமா அழிக்காம, சிறுநீரக மாற்று ஆபரேஷன் பண்றது வீண் வேலை. அந்தக் கிருமி மொத்தமா அழியறதுக்காகக் காத்துருக்கோம். எல்லா சங்க டத்தையும் சமாளிச்சுட்டேன். ஆனா, ஒரு நாளைக்கு 400 மில்லிக்கு மேல தண்ணி குடிக்கக் கூடாதுங்றதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. பால் 100 மில்லி, சாதத்துல 200 மில்லி, தண்ணீர் 100 மில்லி... இதுக்கு மேல என் உடம்புல தண்ணிச் சத்து சேரக் கூடாதாம். இந்த அளவுல, கொஞ்சம் அதிகரிச்சாலும்  மூச்சுத்திணறல் வந்துடும். மத்தவங்க தண்ணி குடிக்கிறதைப் பார்த்தா நான் வருத்தப்படுவேன்னு நினைச்சு, எங்க வீட்ல எல்லாரும் எனக்குத் தெரியாம மறைஞ்சு மறைஞ்சு தான் தண்ணி குடிக்கிறாங்க. இதுக்காகவே எனக்கு சீக்கிரம் ஆபரேஷன் நடந்தா நல்லா இருக்கும்னு தோணுது.
'இதுக்கான செலவை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க’னு கேட்கிறீங்களா? ஒவ்வொரு பள்ளிவாசலாப் போய், மருத்துவச் சான்றிதழ், எங்க ஊர் பள்ளிவாசல்ல கொடுத்த கடிதங்களைக் காட்டி உதவி கேட்போம். அவங்க எங்களை ஒவ்வொருவெள்ளிக் கிழமைக்கும் வரச் சொல்வாங்க. மைக்குல, 'விருப்பம் இருக்கிறவங்க இந்தக் குடும்பத்துக்கு உதவலாம்’னு அறிவிப்பாங்க. துண்டேந்தி நிப்போம். தொழுகை முடிச்சுட்டுப் போறவங்க, கையில இருக்கிறதைக் கொடுப்பாங்க. அந்தப் பணமும், நல்ல மனசுள்ள டாக்டர்களோட உதவியும், எங்க சமுதாய மக்களோட கருணையும்தான் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்திட்டு இருக்கு!'' என்று முடிக்கிறார் யாசின்.
அறுவைசிகிச்சை முடிந்த மூத்த மகன்கள் இரண்டு பேரையும் தொடர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, சிறுநீரக தானம் தந்த இவரும் சோதனை செய்துகொள்வது, கடைசி மகன் யாசினை டயாலிசிஸுக்கு அழைத்துச் செல்வது என அப்துல் மஜீத்துக்கு உட்காரவே நேரம் இல்லை.
''ஊர்ல இருக்கிற வீட்டைத் திறந்து மூணு வருஷமாவுது. ஆதார் அடையாள அட்டை எடுக்க குடும்பத்தோட வர ணும்னு சொல்லியிருந்தாங்க. மூணு வருஷம் கழிச்சு எல்லாரும் போனோம். செடியும்கொடி யுமா பாழடைஞ்ச வீட்டைப் பார்த்துட்டு, பசங்க அழ ஆரம்பிச்சுட்டாங்க. விளையாடுன இடம், படிச்ச பள்ளிக்கூடம்னு அங்கே இங்கே உட்காரவெச்சுக் கூட்டிட்டு வந்தேன். இப்போ ரம்ஜானுக்காக ஊருக்குப் போகலாமானு கேட்டேன்.  'இன்னொரு தடவை அந்த வீட்டை அப்படிப் பார்க்குற தைரியம் எங்களுக்கு இல்லை வாப்பா’னு பசங்க சொல்லிட் டாங்க. இந்த வருஷ ரம்ஜானும் ஆஸ்பத்திரியிலதான் போச்சு. அடுத்த வருஷ ரம்ஜானையாச் சும் ஊர்ல கொண்டாடுவோம்னு நம்புறோம். இப்பெல்லாம் நம்பிக்கை மட்டும்தான் எங்களோட சொத்து!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் அப்துல் மஜீத்.
அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மௌனமாக விடைபெற்றேன்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் சிறுநீரகயியல் துறைத் தலைவர், டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், அப்துல் மஜீத் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னையின் பின்னணியை விவரித்தார்...  
''சிறுநீரகச் செயலிழப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அக்யூட் கிட்னி ஃபெயிலியர். இது, டயாலிசிஸ் மூலமே நாளடைவில் சரியாகிவிடும். அடுத்து க்ரானிக் கிட்னி ஃபெயிலியர். இதற்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் ஒரே வழி. ஆனால், இவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து டயாலிசிஸ் செய்தபடியும் ஆயுளைக் கழிக்கலாம். பொதுவாக உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலி நிவாரண மாத்தி ரைகளை அதிகம் உட்கொள்வது, சிறுநீர் பாதை யிலோ சிறுநீரகங்களிலோ கற்கள் உருவாவது போன்றவற்றால் பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதற்கு நம்முடைய உணவு முறை களும் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டதும் ஒரு காரணம். அல்போர்ட் சிண்ட்ரோம் எனும் தாய்வழி மரபணு மூலமாக வரும் சிறுநீரகக் குறைபாட்டால் தான் அப்துல் மஜீத்தின் மகன்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். செவித்திறன் குறைவும் பார்வைக் குறைபாடும் இதன் ஆரம்ப அறிகுறிகள். அதைத் தொடர்ந்து சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும்.
இதுபோன்ற அறிகுறி  களோடு மட்டும்தான் க்ரானிக் கிட்னி ஃபெயி லியர் வரும் என்று சொல்ல முடியாது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் அனை வருமே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters