வெள்ளி, ஜனவரி 27, 2012

சவுதியில் இந்தியர்கள் இரத்த தானம் - இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் பல்வேறு கிளைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இரத்த தான முகாம்கள், பாதிக்கப்பட்டோருக்கு அவசர கால நிவாரண உதவிகள், கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், ஜகாத் உதவிகள், உடற்பயிற்சி முகாம், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, ரியாத் மாநகரில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 16 ஆவது மெகா இரத்த தான முகாம் ஆகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அவர்களுள் பலருக்கு பி.ஜெ. அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் குறிப்பிடும் போது, "இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெறுமனே கொடியேற்றிவிட்டு கலைவதும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையுமே பெரும்பாலோர் செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளோ சினிமா நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதில்தான் தத்தமது கவனத்தை செலுத்துகின்றன. இந்த நாட்களில் அனைவரும் பயன்பெறும் வகையில் TNTJ பயனுள்ள நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பாகம் தான் இன்றைய இரத்த தான முகாம். இந்த இரத்த தான முகாம் குறித்த செய்திக்குப் பிறகாவது, நமது குடியரசு தின கொண்டாட்டங்களை மக்கள் பயனுறும் முறையில் அமைத்துக் கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்" என தெரிவித்தார்.

நாம் அளித்த இந்த குருதிக்கொடை இந்திய விடுதலைக்கு வித்திட்ட முஸ்லிம்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவுபடுத்தும் விதமாக அமையட்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரமின்மை மற்றும் இதர காரணங்களால் 270 நபர்கள் பதிவு செய்ததில், 248 நபர்களால் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.

ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகளும் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளுக்கிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இச்செய்தி பிரபல நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: http://riyadhtntj.blogspot.com/2012/01/riyadthtntj-republic-blood-donation.html


நன்றி சுவனப்பிரியன்
http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_25.html


சனி, ஜனவரி 14, 2012

35-வது சென்னை புத்தகக் கண்காட்சி - டிப்ஸ் (பாகம்-2)


35  வது சென்னை புத்தகக் கண்காட்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையும் ஆரம்பித்து விட்டதால் இந்த நான்கு நாட்களும்  நிச்சயம் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் சென்ற வாரம் நான் வெளியிட்ட இந்த டிப்ஸ் பதிவை மீண்டும் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதோ எனது திருத்தப்பட்ட  மீள் பதிவு....                                                     
ஒவ்வொரு வருடமும் நான் சென்னையில் இருக்கும் பொழுதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வகையில் நான் கற்றுக்கொண்ட சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே...

1 . கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும்.

2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.

3 . இந்த 4  நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள்.

4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.

5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.

6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.

7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.

8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.

9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.

10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர், அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.

                                                
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.

12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.

13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே  இருப்பார்.

14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமா இருக்கும் பராமரிப்பு.

15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.

நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்....  எவ்வளுவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது.... நாமும் பழி தீர்ப்போம்...


டிஸ்கி-1 : நானும் ரஹீம் கஸாலியும் நேற்று சென்று இருந்தோம், நோட்புக் எடுத்துச் செல்ல மறந்து விட்டோம். கல்கியின் பொன்னியின் செல்வன் புக் ஒரு கடையில் மிகக் குறைவான விலையில் கொடுத்தார்கள், அந்த கடை எண்-னை மறந்துவிட்டோம், சிறிது நேரம் கழித்து எவ்வளவோ முயன்றும் அந்த கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


புதன், ஜனவரி 11, 2012

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்!(எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)


கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்?   */
என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.
வாங்க கக்கு மாணிக்கம்,
நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன். நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.
உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.

இனி, அண்ணன் கோவி கண்ணன்,
விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத  பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட  பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக  நீங்கள் மாற்றி  இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர்  வந்து விட்டதா , உடனே  எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய   மனப்பான்மையில்   நீங்கள் கட்டுரை தீட்டியதோ  ஏனோ?????
இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது. விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது  இல்லைவிவசாய
நிலங்கள்  வீட்டு மனைகளாக  மாறவில்லை  என்றால்  அது சரியான பதில்.


அதுவும் இல்லையா, சவுதியோட திட்டங்கள் சரி இல்லை. இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம். அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்? விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா? அவர்களை  அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா???? அல்லது உங்களுக்கு தெரியாதா????
பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள். ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.
அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள். யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.
கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது. இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம். இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை .
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது."
டிஸ்கி - 1 :
இன்றைய நிலையில் சவூதி அரேபியா தன்னிறைவு அடைந்த நாடுதான். ஆனாலும் பெட்ரோலை மட்டுமே நம்பாமல் இப்பொழுதே விவாசயத்திலும் கவனம் செலுத்தும் அந்த அரசின் பார்வை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்ல செயல்தான், தொலைநோக்கு பார்வைதான். இதை விவாதிக்கும் பொருளாக  எடுக்காமல், பாசிடிவாக எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.


செவ்வாய், ஜனவரி 10, 2012

மொக்கை பதிவர் சாம் மார்த்தாண்டனுக்கு ஒரு மடல்....


                                                            

அன்புள்ள சாம்,
நலமா??? நான் நலம். சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு பதிவுலக பிரபல??? பதிவர் மூலம் உங்கள் தளம் பற்றி கேள்விப்பட்டு, வாசிக்கத்தொடங்கினேன். எப்பொழுதெல்லாம் இணையம் பயன்படுத்துவேனோ அப்பொழுதெல்லாம் உங்கள் மொக்கை தளத்திற்கு வரத் தவறியது இல்லை. உங்கள் அடுத்த பதிவு எப்பொழுது எப்பொழுது என்று வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்(???).
இவ்வாறான சூழ்நிலையில், இன்றைய ஆண் வெஜ், பெண் வெஜ் பதிவில். இது தான் எனது கடைசி பதிவு என்று குறிப்பிட்டு எங்களை எல்லாம் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கி விட்டீர்கள். ஏன் இந்த திடீர் முடிவு? என்ன நடந்தது? யார் உங்களை இந்த முடிவை நோக்கி தள்ளியது???

வேண்டாம் சாம். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். அப்புறம் கடாபிக்கு யார் கடிதம் எழுதுவது??? இறந்து போன கடாபிக்கு கடிதம் எழுதும் தைரியம் உங்களை விட்டால் யாருக்கு இருக்கிறது????? வாசகர் கடிதப் போட்டி யார் நடத்துவது????


நீங்கள் நேர்மையானவர் இல்லை சாம். வாசகர் கடிதப்போட்டியில் 3 வது பரிசு பெற்ற கடிதத்தை வெளியிட்டுவிட்டு, முதல் பரிசு பெற்ற கடிதத்தை வெளியிடாமலே செல்கின்றீர்களே. இது எந்த விதத்தில் நியாயம்??? முதல் பரிசு பெற்ற கடிதத்தை அண்ணன் ஜெட்லியா வெளியிட முடியும்??? இது என்ன கூத்து சாம்.

/* எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார் */
உங்களுடைய "சாம் காட் வெரி ஆங்ரி" என்ற பதிவில்,
மேற்சொன்னது போல் தானே கூறி இருந்தீர்கள். சொல்லியபடி செயல் என்ற சொல்வடைக்கு ஏற்ப(அண்ணன் பன்னிகுட்டி வந்து "ஏன் சொல் சமோசாவ இருக்க கூடாதா" என்று கேட்கக்கூடாது) நீங்கள் ஜெட்லி மீது தனிமனித தாக்குதல் நடத்தவில்லையே சாம், மாறாக அவர் குடும்பத்தையே தானே தாக்கினீர்கள். நீங்கள் ஒரு வாய்ச் சொல் வீரர் அல்ல என்பதை நிரூபித்தீர்களே சாம். அப்படி பட்ட உங்களுக்கு என்ன ஆனது???
மற்றொரு விஷயம் "மை டியர் மார்த்தாண்டன்" படத்தை விட உங்கள் பதிவுகள் நல்ல காமாடியாகவே இருந்தது. சீரியஸ் பதிவுகள் எல்லோராலும் எழுத முடியும். காமடி பதிவு எழுதுவது தான் கஷ்டம். உங்களுடைய பல பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகள் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது உண்மை.

/* ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. */
சாம் காட் ஆங்ரி என்ற அதே பதிவில் மேற் சொன்னபடி தானே கூறி உள்ளீர்கள். ஜெட்லி என்னை கிண்டல் பண்ணாதீங்க என்று வெளிப்படையாக கேட்க வில்லையே சாம். அப்புறம் எதற்க்காக நீங்கள் நிறுத்த வேண்டும்???? ஒரு விஷயம் தெரியுமா? உங்கள் பதிவுகள் மூலம் ஜெட்லி மேலும் பிரபலம் அடைந்தார் என்பதே உண்மை. அப்படி இருக்கையில் எதற்காக சாம் நீங்கள் நிறுத்த வேண்டும்? 

ஒவ்வொரு பதிவின் முடிவிலும் முத்தாய்ப்பாய் ஒரு வசனம் வைப்பீர்களே. உங்களால் மட்டும் தான் சாம் முடியும். இந்த பதிவில் கூட..
/* நனைப்பதல்ல நீ !!
துவைத்து காய போடுவதே நீ !!!  */
என்று முடித்தீர்களே.

மேலும் கடாபிக்கு எழுதிய கடிதத்தில்

/* நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....  */

என்று முடித்தீர்களே.

இவற்றையா இனி நாங்கள் பார்க்க முடியாது??? ஏற்றுக்கொள்ள முடியவில்லை சாம். உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்.
ஒன்று மட்டும் உண்மை. உங்களின் இந்த அறிவிப்பு என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களை பாதிக்குமோ இல்லையோ, நிச்சயம் ஜெட்லியை பாதிக்கும்.
தேவை ஏற்பட்டால் உங்களுக்கு இரண்டாவது கடிதமும் எழுதுவேன் சாம்.
டிஸ்கி-1  : நீங்கள் தொடர்ந்து மொக்கை ப்ளாக்கில் எழுத வில்லை என்றால். உங்களுடைய ஒரிஜினல் தளத்தில் வந்து நான் கடுமையாக சண்டை போடுவேன் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஸ்கி - 2 :
டிஸ்கி 1ல்  ஒரு வார்த்தை மட்டும் மிஸ்ஸிங். அது என்னன்னு தேவை ஏற்பட்டால்
சொல்வேன்.


திங்கள், ஜனவரி 09, 2012

பயோ-டேட்டா..... அமெரிக்காபெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு

தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் : இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்

முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்

அசுர பலம் : வான் வழித் தாக்குதல்

பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள். நிலம்  வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது : கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது : இஸ்லாம் மற்றும் கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)

அமெரிக்கர்கள் : வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள் : சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் : கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில் கொள்ளை அடித்த இடம்  : ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் : லிபியா

சமீபத்திய சந்தோசம் : ஒசாமா பின் லாடனை கொன்றது

நீண்டகால சந்தோசம் : உலகம் இவனை நல்லவன் என்று இன்னும் நம்புவது

அதிபர் : போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம் போடுபவர்

மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

மறக்காதது : ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர் செய்வதை

உலகம் : தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும் உருண்டை

சமீபத்திய எரிச்சல் : தலிபான்


நீண்டகால எரிச்சல்  :  ஈரான்  மற்றும் சீனா

ஒரே சாதனை : இன்னும் வல்லரசாக இருப்பது


சனி, ஜனவரி 07, 2012

ஜெயலலிதா படத்தை கொளுத்திய அ.தி.மு.க.,வினர்.... ஆப்பு ரெடி.....


இன்று காலை வெளிவந்த நக்கீரனில் தேவையில்லாமல் வியாபார நோக்குடன் எழுதப்பட்ட ஒரு செய்தி அ.தி.மு.க.,வினரை ஏகத்துக்கு உசுப்பெற்றி விட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும்  நக்கீரன் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மொத்த இதழ்களையும் அ.தி.மு.க., தொண்டர்களே வாங்கிவிட்டனர். சில இடங்களில் எடுத்துக்கொண்டனர். அதை வாங்கி இலவசமாக வினியோகமாவது செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. அனைத்து இதழ்களையும் நெருப்புக்கு இரையாக்கி விட்டனர்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல எரிக்கும் அவசரத்தில் அதில் ஜெயலலிதா படம் இருந்ததை கவனிக்கவில்லை போலும்...அந்தப்படத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள் ஹி...ஹி...
தன் படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்திய அத்தனை பேருக்கும் ஜெயலலிதாவால் ஆப்பு இருக்குடியோ.....
(ஏதோ நம்மால் முடிந்தது)

பி.கு:  இந்த திடீர் தட்டுப்பாட்டை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த கோபால், ஒரு ரகசிய இடத்தில் மீண்டும் ஒரு லட்சம் பிரதிகளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக  உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது. அப்படி அச்சடிக்கப்படும் பிரதிகள் ஹெலிகாப்டரின் மூலம் அந்தந்த பகுதி ஏஜெண்டிடம் கொடுக்கப்படும் என்று கோபால் தெரிவித்துள்ளார்.


புதன், ஜனவரி 04, 2012

ஊழல் செய்யும் ஜூனியர் ஹஸாரேக்கள்...

                                                                                                                                
2011 ஆம் ஆண்டு போராட்டங்களுக்கான ஆண்டு. உலக அளவில் பல அரசுகளை ஆட்டம் காணச் செய்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவும் இதற்க்கு விதி விலக்கல்ல. அவற்றுள் அன்னா ஹஸாரே நடாத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போராட்டத்தில் கூட்டம்  கூட்டமாக பொது மக்களும், எதிர் கட்சிகளும், இளைஞர்கள்  மற்றும் பொது நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுள் IT , BPO மற்றும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு குறுப்பிடத்தக்கது. ஈமெயில், Facebook , Twitter , Utube , SMS மற்றும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மிகப் பெரிய அளவில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
ஆனால் இவர்களின் நேர்மை குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் வெளி வேஷம் போடும் போலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏன் அவ்வாறு தோன்றுகிறது. இதோ காரணங்கள்...
IT , BPO மற்றும் இதர தனியார் நிறுவங்களில் பணி புரிவோரில் பெரும்பாலானவர்களுக்கு  இலட்சங்களில் தான் வருடச் சம்பளம். இவர்களின் சம்பளம் BASIC , HRA , LTA , மெடிக்கல் allowance , போனஸ் என்று பல வகையாக பிரிக்கப் பட்டிருக்கும்.
HRA - House Rent Allowance
LTA - Leave  Travel Allowance
இந்திய அரசின் வருமான வரி விதிப்படி ஒரு வருடத்திற்கு 1 ,80 ,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும். பெண்கள் என்றால் 1 ,90 ,௦௦௦ ரூபாய். இது தவிர மேலும் சில வரி விலக்குகள் உள்ளன.
 
உதாரணம் - 1 : வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் வாடகைப் பணத்திற்கு (அதிக பட்சம் HRA ல் குறிப்பிடப் பட்ட தொகை) வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இதற்க்கு வாடகை செலுத்தியதர்க்கான ரசீதை அரசுக்கு காண்பிக்க வேண்டும்.
 
உதாரணம் - 2  : வருடத்திற்கு 15 ,000  ரூபாய்க்கு மெடிக்கல் பில்களை காட்டி வரி விலக்கு பெறலாம்.
உதாரணம் - 3   : LTA . இதன்படி வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன்(தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள்) எங்காவது வெளி ஊர் சென்றிருந்தால் அதற்க்கான இரயில் டிக்கெட் அல்லது விமான டிக்கெட் அல்லது வாடகை வாகன பில்லை காட்டி 24,௦௦௦ ருபாய் அல்லது 36 ,௦௦௦ க்கு வரி விலக்கு பெறலாம்.
இவை தவிர இன்னும் சில வழிகள் உள்ளன. நாம் இவை மூன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
                                                 
நமது ஜூனியர் ஹஷாரேக்கள் இந்த இடங்களில் விளையாடுவார்கள் பாருங்கள் விளையாட்டு. அப்பப்பா.... அதை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை சகோ.
ஒருவர் சொந்த வீட்டில் இருப்பார், ஆனால் வாடகை வீட்டில் இருப்பது போல் காட்டி, இவரே ஒரு போலி  ரஷீத் தயாரித்து HRA பணத்திற்கு வரி விலக்கு பெற்றுவிடுவார். அல்லது வாடகை வீட்டில் இருப்பார், அதற்க்கு வாடகையாக 3 ஆயிரம் மட்டுமே கொடுப்பார், ஆனால் அவரின் HRA 12 ,000 ரூபாயாக இருக்கும். எனவே தலைவர் இதுக்கும் ஒரு போலி பில் கொடுத்து 144000 ரூபாய்க்கு (12000 X 12 ) வரி விலக்கு பெற்றுவிடுவார்.
அடுத்தது LTA , அந்த வருடம் குடும்பத்துடன் எந்த ஊருக்கும்  பயணம் செய்து இருக்க மாட்டார் அல்லது கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு மட்டுமே சென்று இருப்பார். ஆனால் மும்பை, டெல்லி, சிம்லா மற்றும் காஷ்மீர் போனது போல் போலி பில் கொடுத்து (அப்பொழுதுதானே நிறைய பில் வரும்) வரி விலக்கு பெற்று விடுவார்.
போலி LTA பில் கொடுக்கவென்றே ஒவ்வொரு IT மற்றும் BPO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் வெளியே போலி travel ஏஜெண்டுகள் காத்துக் கிடப்பார்கள்.
அடுத்தது மெடிக்கல் பில், தலைவர்களிடம் 6000  ரூபாய்க்கான பில்கள் தான் இருக்கும், மீதி 9000 ரூபாய்க்கு ஏதாவது ஒரு மெடிக்கல் கடையில் கொஞ்சம் பணம்(லஞ்சம்) கொடுத்து போலி பில் வாங்கி வரி விலக்கு பெற்றுவிடுவார்கள்.
நான் அவதானித்த வகையில் 95 % பேர் இப்படிதான் செய்கிறார்கள். இந்த 95 % த்தில் 95 % பேர் அன்னா ஹஸாரே யின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மிகக் கடுமையாக ஆதரிக்கிறார்கள். எப்பொழுதும் அதைப் பற்றியே பேசுகிறார்கள். எவ்வளவு பெரிய முரண் இது? எவ்வளவு பெரிய மோசடி இது?
ஐயா ஜூனியர் ஹஷாரேக்களே, நீங்க பண்றதும் ஊழல் தான். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அளவில் ஆயிரங்களில் அரசை ஏமாற்றுகிறீர்கள். அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப கொள்ளை அடிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தயவு செய்து நீங்கள் உத்தமர்கள் போன்று பேசும் பேச்சை நிறுத்துங்கள். நீங்களும் பிராடுகள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இல்லை... இல்லை... நான் உண்மையிலே ஊழலை எதிர்க்கிறேன்னு சொன்னீங்கன்னா. நடந்து முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், இனி வரும் காலங்களில் போலி ஆவணங்கள் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் இலஞ்சம் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை மதித்து நடக்க உறுதி எடுக்க முடியுமா? அப்படி எடுத்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதில் உறுதியாக  இருக்க முடியுமா?
2011 - 2012 க்கான வருமான வரி சான்றுகள் கொடுக்கும் நேரம் வந்து விட்டது. சரியான ஆதாரங்களை மட்டும் வழங்குங்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்களை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அப்படி இல்லை என்றால், உத்தமர்கள் பேசும் உங்கள் வாய்ச் சவுடால்களை நிறுத்துங்கள். பாவம் ஊழலுக்கு எதிராக உண்மையாக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு கெட்ட பெயர் வராமலாவது இருக்கும்.
போங்கயா நீங்களும்.... உங்க நேர்மையும்... உங்க ஊழலுக்கு எதிரான போராட்டமும்....

டிஸ்கி : நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன். இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters