புதன், பிப்ரவரி 22, 2012

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு


 
                                                      
 
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி J . ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் சொன்ன சில முக்கியமான வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன் என்பதும் ஒன்று.
 
 
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தற்போதைய முதல்வரின் ஸ்பெசாலிட்டி என்பது போன்ற ஒரு பிம்பமும் நீண்ட நெடுங்காலமாய் அவரின் ஆதரவு பத்திரிக்கைகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வாயிலாக பெருமையுடன் பேசப்பட்டு வந்தது. இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இதுவும் அரசிடம் காரியம் சாதிக்க நினைக்கும் நபர்களின் துதிகளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
 
 
நிறைய உதாரணங்கள் இருந்தாலும் ஓரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
 
 
சம்பவம்-1 : சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.


சம்பவம்-2 : சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்த வங்கியில் நேற்று பகல் 2 மணிக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். வந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி சர்வ சாதாரணமாக ரூ 14 லட்சங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
 
 
சம்பவம்-3 : நேற்று இரவு திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள் ரூ 14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதே திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் முத்தூட் நிறுவனத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.
 
 
                                                      
 
 
கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்???? ஒவ்வொரு கடை அல்லது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நடை முறைச் சாத்தியமா? என்று யோசித்தால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கொள்ளை நடக்கும் விசயத்தில் அரசை பெரிதாக நாம் குற்றம் சாட்டி விட முடியாது தான்.
ஆனால் பெரிய அளவில் திட்டம்   போட்டு பட்டப் பகலில் பஹிரங்கமாக துப்பாக்கி காட்டி கொள்ளை அடிக்கும் நபர்களை பல மாதங்களாக பிடிக்க முடியாமல் இருப்பது நிச்சயம் காவல்துறை மற்றும் உளவுத் துறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
 
 
இதற்கு மேலும் தாமதிக்காமல், முதல்வர் மக்களுக்கு கொடுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்ற வாக்குறுதியை உறுதியாக செயல்படுத்த வேண்டும். உண்மையோ பொய்யோ, அவரின் மீது கூறப்படும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர் என்ற சொல்லை காக்க கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது நிச்சயம் அவரின் ஆட்சியின் நீங்காத கரையாக வரலாற்றில் பதியப்படும். பின் அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை.
 
 
நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அது முற்றிலும் உண்மை தான். அதற்காக நன்றி மேடம்.
 
 
ஆனால்... ஆனால்... பேங்குகளையும், நகைக்கடைகளையும் கொள்ளை அடிக்கும் பலே திருடர்கள் அனைவரும்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து விட்டார்களே அம்மா. வாட் டு டூ!!!!!!
 
 
இது தொடர்பில் நான் இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவையும் பார்வையிடுங்கள் நண்பர்களே...
 


திங்கள், பிப்ரவரி 20, 2012

இன்றைய சென்னை பனி மூட்டமும், எனது ஆக்ரா நினைவுகளும்....

 
இன்று அதிகாலை எழுந்து வீட்டின் கதவை திறந்த சென்னை வாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கிடந்தது.
 ஊரைச் சுற்றி வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஒரே பனிமூட்டம் (FOG ). சென்னைக்கு , அதுவும் பிப்ரவரி மாத இறுதியில் இது அரிதான காட்சி என்பதால் பார்க்கவே பரவசமாக இருந்தது.
 
 
                                                 
 
எனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பைக்கில் சென்ற பொழுது குளிர்க்காற்று முகத்தில் அறைந்தது பேரானந்தம்.
அதுவும் சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்த நிலையில்.
நிச்சயம் அனைவரும் ரசித்து அனுபவித்து இருப்பார்கள். 
 
காற்றின் வேகக் குறைவும், ஈரப்பத குறைவும் இந்த பணிமூட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அது தினமும் தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
டெல்லியில் இருப்பது போல் ஒரு பீலிங்.
 
இதன் மறுபக்கமாக, இன்று அதிகாலை முதல் 7 மணி வரை சென்னை விமான நிலையத்தில் எந்த விமானகளும் தரை இறங்கவோ அல்லது கிளம்பவோ இல்லை என்று புதிய தலைமுறை செய்தி சொன்னது. ECR ரோட்டில் ஒரு பஸ் கவிழ்ந்து உள்ளது. நிச்சயம் இதற்கும் பணிமூட்டமே  காரணமாக இருக்கும்.
 
இதைப் பார்த்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு டிசம்பர் மாதத்தில் டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு தாஜ்மஹால் பார்க்க நண்பர்களுடன் சென்றது தான் நினைவிற்கு வருகிறது. பனி மூட்டம்னா மூட்டம், அப்படி ஒரு மூட்டம். மூட்டு மூட்டுன்னு மூட்டிருச்சு என்றே சொல்லலாம். 10   அடிக்கு   முன்னாள் இருந்த எதுவும் தெரியவில்லை. அதிகாலை 5 மணிக்கே புறப்பட்டுவிட்டோம் பெரிய பெரிய  கனவுகளுடன்.
 
 
                                                
 
என்ன கனவென்றால், நேராக பதேபூர் சிக்ரி(முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம்) என்ற ஊருக்கு போவது. அதன் பின் தாஜ்மஹால் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் சரித்திர புகழ் பெற்ற ஆக்ரா கோட்டையை பார்வை இடவேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள். அனைத்துக்கும் இந்த பனி(FOG ) வச்சது பாருங்க ஆப்பு....
 
ஆமாங்க.. நாங்க அனைவரும் ஒரு செவ்ரோலே காரில்  சென்றோம், ஒரு 3  மணி நேரத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம் என்று திட்டம். ஆனால் இந்த பணியால் 5 மணி நேரங்களுக்கு மேல் ஆனது. போகும் வழி எல்லாம் சிறு சிறு விபத்துக்களை காண நேர்ந்தது. விபத்து நடந்த ஒவ்வொரு இடங்களிலும் 3 அல்லது  அதற்க்கு மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன.
 
இப்படியாக தாமதம் ஆனதால், நிகழ்ச்சி நிரலில் சில மாறுதல்களை செய்தோம். அதாகப்பட்டது, பதேபூர் சிக்ரி போவது இல்லை என்றும். முதலில் ஆக்ரா கோட்டையை பார்த்துவிட்டு தாஜ் மஹால் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆக்ரா அடைந்தவுடன், அந்த ஆக்ரா கோட்டையை பார்வையிட உள் நுழைந்தோம்.....
 
 
                                             
 
ஆக்ரா கோட்டையை பார்வை இடுகையில் தான்...இந்திய வரலாறு எப்படி பொய்களாலும் நயவஞ்சகங்களாலும்  நிரப்பப்பட்டுள்ளது என்பதை கண்டு கொண்டேன்...
 
மக்களே தயவு செய்து இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்.... அது பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை நான்
எனது அடுத்த பதிவில் நிரூபிக்கிறேன்....
 
அதுவரை காத்திருங்கள் சகோஸ்.......


சனி, பிப்ரவரி 18, 2012

என்னப்பா இது... வினவுக்கு வந்த சோதனையா இது....??????

கடைய நல்லூர்ல துரப்ஷா துரப்ஷா னு ஒருத்தர் கோழி கடை வச்சி இருந்தாராம். அவர் ஒரு முஸ்லிமா இருந்தாராம். சிலப் பல நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய கொள்கை 
பிடிக்காமால் கம்யுனிஸ்ட் ஆகிட்டாராம். ஆனா என்ன, அமைதியா கோழி வியாபாரம் பார்த்துகிட்டு குழந்த குட்டிய படிக்க வச்சிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதானே.

அண்ணே அத தான் செய்யல. கம்யுனிஸ்ட் புத்தி சும்மா இருக்குமா???? இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் மதிக்கும் லூத் என்ற நபிய பத்தி எவனோ எழுதின ஒரு கட்டுரைய பேஸ்புக் ல பஹிர்ந்தாராம். சரி அதாவது ஒரு நாகரிகமாக பேசும் கட்டுரயான்னா பதில் இல்லன்னு தான் சொல்லணும். பார்த்த  நம்ம பக்கிய சும்மா இருக்குமா???
பிரிச்சு மேஞ்சுருச்சுகன்னு நினைக்கிறேன். சரியா தெரியல. மேஞ்சிட்டாணுக என்றே கொள்வோமே?? என்ன கெட்டிவிட போகிறது???

ஏன் பிரிச்சாணுக???? அது என்ன அவுக எழுதுன கட்டுரையா??? பஹிர்ந்தது தானே??? யார் எழுதுனதுன்னு நீங்க ஏன் ஆராட்சி பண்ணல???? அப்படின்னு வினவு குதிக்குது. இங்க தான் எனக்கு ஒரு மைல்ட் டவுட்டு. எழுதுனா என்ன?? பஹிர்ந்தா என்ன??? எல்லாம் ஒண்ணுதானே???? என்னோவோ போங்க வினவுக்கு தான் வெளிச்சம்.

சரி, மேஞ்சு முடிச்சாச்சா???? மேஞ்ச உடனே நம்ம துரப்ஷா என்ன பண்ணி இருக்கணும்??? வினவுக்கு போன் போட்டு இருக்கணும். இந்த இந்த மாதிரி நம்ம கொள்கைய எதிர்க்கிராணுவ, கருத்து சுதந்திரம் இல்லாம போய்டுச்சு, கேவலம் 400 கோடி பேர் மதிக்கும் ஒரு மனிதரை அநாகரிகமாக பேசுவது தவறா???  அராஜகம் தலை விரித்து ஆடுது,
நாங்கல்லாம் சீனாவுக்கு போய் அங்கேயே ஜிங் ஜங் ஜக்க எதிர்த்து கேள்வி கேட்போம், இவனுக என்ன சுண்டக்கா  அப்படின்னு. அப்படி செஞ்சாரா நம்ம துரப்ஷா. அது தான் இல்ல. அடிச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்.

அட ஆமாங்க, நம்புங்க.. "நான் தப்பு பண்ணிட்டேன், என்ன மன்னிச்சுகங்க, நான் அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் உளமார நம்புறேன்னு" சொல்லிட்டு படக்குன்னு முஸ்லிம் ஆயிட்டாரு இந்த கொள்கைக்  குன்று.

பொறுக்குமா வினவுக்கும் அவர் கூட்டாளி ரெட் flag க்கும்???? போட்டாங்க பாரு ஒரு கட்டுரைய. அந்த கத உங்களுக்கே தெரியும். அத பார்த்து மனிதாபிமானி சும்மா இருப்பாரா??  போட்டாரு பாருங்க அவரு ஒன்ன, அதுவும் பத்திகிட்டு ஓடுது. இதெல்லாம்  பார்த்துகிட்டு நான்  சும்மா இருப்பேனா?? போட்டேன் பாருங்க நான் ஒன்ன. அதான் இது.

யாரோ நாலு பேரு இழுத்துகிட்டு போய் அவர முஸ்லிம் ஆக்கிடாங்கலாம். நான் நெனைக்கிறேன் இதுக்கு முன்னாடி செங்கொடி தான் இழுத்துகிட்டு போய் மிரட்டி அவர கம்யுனிஸ்ட் ஆக்கி இருப்பாருன்னு. இப்ப முஸ்லிம்கள் மிரட்டி முஸ்லிம் ஆக்கிட்டாங்க. நாளைக்கு RSS காரன் மிரட்டி இந்து ஆக்குவாணுக. அதுக்கு பிறகு கம்யுனிஸ்ட் மீண்டும் மிரட்டி பொதுவுடமைக்கு வருவாரு.

துராப்சாவுக்கு இருக்கிறதுக்கு பேரு ஒரு கொள்கை??? இதில அவரு எங்க கோஷ்டி, உங்க கோஷ்டின்னு ஒரு சண்டை??? அதுக்கு 3 பதிவு வேற. போங்கப்பா, போய் வேலைய பாருங்கப்பா. நாளைக்கே  அவரு கிறித்துவரா  வந்தாலும் வருவாரு.

முடிக்கும் முன், இதுக்கு நடுவுல என்ன காமடி நடந்துச்சுன்னு தெரியல. இன்னொரு பொது உடமை கொள்கைக் குன்று ரெட் FLAG  தன் தளத்த மூடிருச்சு. என்ன நடந்துச்சு, என்னான்னு புரியல. மர்மமா இருக்கு. இந்த குன்றோட ஊரும் கடையநல்லூர் தான் என்பது கூடுதல் தகவல்.

என்னப்பா இது!!!
(கடைய)நல்லூருக்கு வந்த சோதனையா இது....
பொதுவுடமைக்கு வந்த சோதனையா இது....
குறிப்பா வினவுக்கு வந்த சோதனையா இது....??????


புதன், பிப்ரவரி 15, 2012

தி.மு.க.,வின் தலைவராக நான் ரெடி- இது அழகிரியின் அட்டாக்.....


சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில்  இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற  17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்  நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.

அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.

அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக,  தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.


ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

என்னை பேச வைத்துவிடாதீர்கள்- ஜெயலலிதாவை மிரட்டும் விஜயகாந்த்.........
விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:


இடைத்தேர்தலுக்கு 26 மந்திரிகள் உள்பட 34 பேர் கொண்ட குழு அதிமுக அமைத்திருக்கிறது. ஆனால், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 26 மந்திரி உள்பட 34 பேர் கொண்ட குழுவை அனுப்பினீர்களா? எங்க மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். சங்கரன் கோவிலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் அதிருப்திபயாக உள்ளனர். நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.


சங்கரன் கோயில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால், வேட்பாளரை அறிவித்துவிட்டு குழுக்களை அமைத்து ஓட்டுக்ககு இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். இது உங்களுக்கு (அதிமுக) இடைத்தேர்தலில் தோல்வி பயம் உள்ளது என்பதை இப்போது தெரிந்துவிட்டது. என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்பட போவதில்லை. என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன்.

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர்.   இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


சனி, பிப்ரவரி 11, 2012

சசிகலாவுடன் மோதியதால் கைது செய்யப்பட்ட செங்கோட்டையன் உதவியாளர்.... சென்னை : குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் அப்பு தெருவில் தேஜூ அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கோவர்த்தனன். இவரது மனைவி சசிகலா. இந்த அபார்ட்மென்ட்டில் சசிகலாவுக்கு சொந்தமாக இன்னொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பிரிவு உதவியாளர் ஆறுமுகம்(38), வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் வந்து சென்றனர். பலர் குடித்து விட்டும் வந்தனர். கார்களை தங்கள் விருப்பம்போல நிறுத்தி விட்டுச் சென்றனர். இதுகுறித்து அபார்ட்மென்ட்டில் வசித்தவர்கள் சசிகலாவிடம் புகார் செய்தனர். இதனால், கடந்த 4 மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம் சசிகலா கூறினார். ஆனால் அவர் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம், சசிகலா கூறியுள்ளார். அதனால், இரவு அவர் குடித்து விட்டு தனது கார் டிரைவர் ராஜசேகருடன் அங்கு வந்துள்ளார். சசிகலாவின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். பின் வீட்டில் இருந்த டீப் பாயை உடைத்துள்ளார். அதோடு 'நான் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா' என்று சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து நேற்று மயிலாப்பூர் போலீசில் சசிகலா புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தார். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 452, 506(2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் சிக்னல்

அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை மிரட்டியது குறித்து தெரிந்ததும், உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டிஸ்கி-1: சசிகலா என்றதும் எதையோ நினைத்து வேகமாக படிக்க வந்த உங்களுக்கு நன்றி.

டிஸ்கி-2;இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சசிகலா படம் கிடைக்காததால் முன்னாள் உடன் பிறவா சகோதரியின் படத்தை போட்டு சமாளித்துள்ளேன்.


டிஸ்கி-3: சீரியாசாவே எத்தனை பதிவுதான் போடறது?

டிஸ்கி-4:  டிஸ்கி பதிவை விட பெருசா போயிடுச்சே...
புதன், பிப்ரவரி 08, 2012

வாச்சாத்தி - கிடைத்தது முழுமையான நீதியா????


காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அந்த கூற்றை உண்மையாக்கியது போல் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  கொடுமைகளுக்கு, கடும் போராட்டங்களுக்கு பிறகு , 19  ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதென்ன வாச்சாத்தி வழக்கு, ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்....

ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான ஒரு குக்கிராமம்தான் வாச்சாத்தி. இது தர்மபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் இருக்கிறது. . கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.


இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில்  சந்தன மரங்கள் ஏராளமாக இருந்த காலம் அது.  இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, சந்தன மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.

அங்கு சில பாலியல் ரீதியான தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வர… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழக மலைவாழ் மக்கல் நல சங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த அ(கே)வலத்தை கண்ட தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி கிடைக்க அந்த சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  இவர்களோடு கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தது.  வழக்கும் போடப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக,  இன்றைக்கு அந்த மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க(?????) தீர்ப்பை பெற்றுத்தந்துள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA அண்ணாமலை மற்றும் அதற்காக பாடுபட்ட நெஞ்சுரம் மிகுந்த அனைத்து மக்களையும் நான் உளமார பாராட்டுகிறேன். இதுபோன்று ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் நல்லோர்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்தது முழுமையான நீதி தானா? குற்றவாளிகள் 
அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா??? சிந்திக்க வேண்டிய கேள்வி 
தோழர்களே,நண்பர்களே, சகோதரர்களே.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் அளவில் மனசாட்சியோடு தீர்பளித்துவிட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது ஒரு முழுமையான தீர்ப்பாக எனக்கு படவில்லை, ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்ன நெருடல் அது?????
இந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் பொழுதே இறந்து போனவர்கள் 54 பேர். அவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்க வில்லையே???? அவர்களும் தவறு செய்தவர்கள் தானே???? அவர்களை நம்மால் தண்டிக்க முடியவில்லையே???? மரணம் அடைந்தது தான் தண்டனையா???? அப்படி என்றால் அனைவரும் தானே மரணம் அடையப் போகிறோம்... அவ்வளவு ஏன் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களும் ஒரு நாள் மரணிக்கத் தானே போகிறார்கள். எனவே குற்றவாளிகள் மரணம் அடைந்து விட்டால், அவர்கள் செய்த தீங்குகள் அநீதிகள் இல்லையென்று ஆகி விடுமா????
நிச்சயமாக மரணம் அடைந்தவர்களை எழுப்பி தண்டனை கொடுக்க முடியாது. வேறு என்னதான் தீர்வு????? இங்குதான் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை என்ற தத்துவம் வருகிறது...... சொர்க்கம், நரகம் என்ற கான்செப்ட் வருகிறது.
இறந்தவர்களை ஒருநாள் கடவுள் மீண்டும் எழுப்புவார். அவர்களின் நன்மை, தீமை குறித்து விசாரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சொர்க்கமோ நரகமோ செல்வார் என்ற சித்தாந்தம் வருகிறது.
அருமைத் தோழர் அண்ணாமலை, பாபு மற்றும் இதற்காக பாடுபட்ட தோழர்கள் இதை நம்புவார்களோ மாட்டார்களோ. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான உண்மையான நீதி மறுமை நாளில்தான் கிடைக்கும். செய்த பாவத்திற்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் சென்றுவிட்ட அந்த 54 பெரும் இறுதித் தீர்ப்பு நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.

உலக மக்கள் அனைவர் முன்னிலயிலும் நடக்கும் அந்த நீதி விசாரணையின் போது தவறிழைத்தவர்கள் தலைகுனிந்தும், வாச்சாத்தி மக்கள் தலை நிமிர்ந்தும் சந்தோசமாக நடக்கும் அந்த கணம் நிச்சயம் வந்தே தீரும். அன்றுதான் அவர்கள் நீதிக்கான தேடல் முற்றுப்பெறும்.

குறிப்பு: நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் இருந்த பதிவு இது...  நேரமின்மை காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை.


திங்கள், பிப்ரவரி 06, 2012

பதிவர் சென்னை பித்தனின் மறுபக்கம்....


பிரபல பதிவர் சென்னை பித்தனை, பதிவுலகில் இருக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் பதிவு உண்டு என்று எழுதக்கூடியவர், புதிய பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவர், இத்யாதி இத்யாதி. இது தான் அவரைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்தது. 
அது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் அவர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில விடயங்கள் உண்டு. அவற்றை பொது மேடையில் பேசுவதால் அவர் இதைப்பற்றி தவறாக எண்ணிவிடக் கூடாது**.
                                                       
கடந்த பொங்கல் அன்று, நானும் நண்பன் ரஹீம் கஸாலி அவர்களும் சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றோம். இது  சம்பந்தமாக நண்பன் கஸாலி, "புத்தகக் கண்காட்சியில் நான்" என்ற தலைப்பில் தொடராக எழுதி அனைவரையும் கொலையா  கொண்டதை நாம் அனைவரும் அத்துணை எளிதில் மறந்து விட முடியாது. நிற்க.
நாங்கள் அவருடன் ஒரு 10 அல்லது 15 நிமிடமே பேசி இருப்போம். இது தொடர்பில் சென்னை பித்தன் ஐயா அவர்கள் பதிவிட்டதை போல், நாங்கள் ஒன்றும் பதிவுலகயோ அல்லது மொத்த உலகையோ புரட்டி போடும் விஷயங்கள் பற்றி எல்லாம் பேசவில்லை. நாங்கள் நலம், நீங்கள் நலமா??? என்ற அளவில் தான் பேசினோம். இந்த பதிவு எங்கள் பேச்சு பற்றியோ அல்லது சந்திப்பு பற்றியோ அல்ல. மாறாக அவரது வீட்டில் நான் கவனித்த ஒரு நெகிழ்வான விஷயம் பற்றியது.

ஆம். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவருக்கு அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார்கள். பேச்சின் ஊடாக அவர்கள் யார் என்று கேட்டோம். அதற்க்கு அவர்தான் எனது தாயார், அவருக்கு வயது 93 ஆகிறது. இந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான் இருக்கிறோம், நான் தான் அவரை கவனித்து கொள்கிறேன்  என்று கூறினார். ஒரு நிமிடம் நான் ஆடிப்போய் விட்டேன்.

பெண்டாட்டி, பிள்ளை,, தம்பி தங்கை என்று இருக்கும் பொழுதே இந்த காலத்தில் பெற்ற தாய் தந்தையரை யாரும் கவனிப்பதில்லை. குறிப்பாக நகரம் என்ற நரகத்தில் வாழும் படித்த பொடலங்காய்கள் பொண்டாட்டிக்கு பிடிக்க வில்லை, நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவோம் அதனால் இவர்களை கவனிக்க ஆளில்லை என்று ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி  பெற்ற தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் இந்த காலத்தில், 93 வயது நிரம்பிய தனது தாயை
அவர் ஒருவராக கவனித்துக் கொள்கிறார் என்றால்(சென்னை பித்தனுக்கு வயது 76 , சரியா ஐயா????), அந்த மனிதத்தை என்னவென்று சொல்வது???? அந்த பாசத்தை என்னவென்று சொல்வது????? வார்த்தைகள் இல்லை.

அந்த சந்திப்பிற்கு பின், பல முறை நான் அது பற்றி சிந்தித்தது உண்டு. 76 வயதில் நாம் நமது பெற்றோரை இது போன்று பார்த்துக்கொள்வோமா? ஏன் பெரும்பாலானோரால் .இவரைப்போல் இருக்கு முடியவில்லை? தனது பெற்றோரை புறக்கணிக்கும் கொடூர மனது மனிதனுக்கு எப்படி வருகிறது??? என்று எண்ணற்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.
நாமும் நமது பெற்றோரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதிற்குள்  நினைத்துக்கொண்டேன்.
சென்னை பித்தன் அய்யா!!!! இந்த பொருள்/பணம்  சார்ந்த உலகில், தனி மனிதராக தனது  தாயாரை கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அனைவரும் பாராட்டுக்கு  உரியவர்கள். உங்களில் இருந்து தான், முதியோர் இல்லங்களில் தனது தாய் தந்தையரை விட்டுச் செல்லும் கழிசடைகள் பாடம் படிக்க வேண்டும். இன்று தனது தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் அனாதைகளாக விடும் அனைவரும் நாளை நிச்சயம் அதைவிட கேவலமான நிலையையே அடைவார்கள்.
ஏனெனில், ஆத்திகர்களுக்கு சொல்வதானால், நிச்சயம் இறைவன் அவர்களை தண்டிப்பான். நாத்திகர்களுக்கு அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால்
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு.


உங்கள் தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரில், தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உங்களோடு இருந்தால், அவர்களை ”சீ” என்று கூட கூறாதீர்கள். மேலும், அவர்களை கடிந்து பேசவேண்டாம். மாறாக, அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக.....
அல்குர் ஆன் - 17:23

தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கலாம்.


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஈழ பதிவர்களாம், தமிழ் பதிவர்களாம்...என்ன பிரிவினை இது?

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பதிவுலகில் சமீபத்தில் நடக்கும் சில சங்கடங்கள் வருத்தத்தை தருவதால், எங்கள் நிலையை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

சில ஈழ பதிவர்கள் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. அதற்காகவே தற்போது அவர்களிடம் இருந்து விலகி இருக்கின்றோம். அதே நேரம், இந்த வருத்தத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்பது மாதிரியான எண்ணம் எழுந்தால் அது தவறானது (சகோதரர் நிரூபன் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு சில முஸ்லிம்கள் ஆதரவு வோட் போட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். அதுபோல தமிழக நண்பர்களை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளில் எந்த முஸ்லிமாவது ஆதரவு கொடுத்திருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்).

"...எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை அறிந்தவனாக இருக்கின்றான்" - குர்ஆன் 5:8

இறைவனின் இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தே இருக்கின்றோம். ஒருவர் மீது நாங்கள் கொண்டுள்ள வருத்தம், நியாயம் அநியாயம் பார்க்காமல் அவருக்கு எதிராக செயல்பட வைக்குமானால் நாங்கள் முஸ்லிம்களே இல்லை.

ஈழ, முஸ்லிம் பதிவர்கள் இடையிலான பிரச்சனை துரதிஷ்டவசமானது. இந்த பிரச்சனையில் எங்களுக்கு உதவ இங்குள்ள தமிழ் பதிவர்கள் வரவில்லை என்ற கருத்தையும் காண நேர்ந்தது. இதுப்போன்ற கருத்துக்கள் வருத்தமளிக்க கூடியவை. இங்குள்ள பல பதிவர்களுடன் அழகான நட்பு எங்களுக்கு இருக்கின்றது. பல விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவியும் கொள்கின்றோம். அப்படியான நிலையில் அவர்கள் மீது வருத்தம் கொள்ள ஒன்றுமில்லை. அவர்கள் நிலையில் இருந்து இதனை அணுகவே விரும்புகின்றோம்.

உலகில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகளே. இதில் ஈழ, தமிழர் என்று பிரித்து பார்க்க ஒன்றுமில்லை. பிரச்சனை ரீதியான கருத்துவேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, பகுதி வாரியான கருத்துவேறுபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈழ, தமிழர் என்று பிரிவினை பேசுவதெல்லாம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிராவை. இஸ்லாமிற்கு நேரடியாக பங்கம் விளைவிக்க கூடிய இந்த விசயத்தில் முஸ்லிம்கள் எவ்வித ஆதரவும் தர இயலாது.

பதிவுலக சகோதரர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், தயவுக்கூர்ந்து உங்கள் வேறுபாடுகளை களைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை வளர்க்கும் விதமாக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாடி பதிவிடுவதை நிறுத்துங்கள். ஒருவருக்கு சிறிதளவு கூட சங்கடம் தரும் விதமாக, உணர்வுகளை தூண்டும் விதமாக பதிவிட வேண்டாம். சிலபல காலம் இதுக்குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்துக்கொள்ளுங்கள். நேர இடைவெளி நிச்சயம் ஒரு அழகான புரிதலை தரலாம் (இறைவன் நாடினால்).

இதுப்போன்ற துரதிஷ்டவசமான நிலையிலிருந்து பதிவுலகம் வெளியில் வந்து ஆரோக்கியமான வகையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

--- சிராஜ் & ஆஷிக் அஹமத்
நன்றி: முஸ்லிம் பதிவர்கள்.     


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters