வியாழன், செப்டம்பர் 26, 2013

இஸ்லாத்தில் துறவரம்...


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...

சில மாதங்களுக்கு முன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது,
3 - ம் எண் பேருந்தில் இருந்து கீழிறங்கி 4 - ம் எண் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். பேருந்தும் வந்தது, பயணிகள் சிலர் கீழிறங்கிக் கொண்டிருக்கும் போதே உட்கார இருக்கைகள் இருக்கிறதா என்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இருக்கைகள் எதுவும் இருக்கவில்லை எனினும் பேருந்தில் கூட்டமும் இருக்கவில்லை. நான் கீழே நின்று கொண்டிருக்கும் போதே என்னை உற்று நோக்கியபடியே ஒரு பெண் பேருந்தினுள் நின்று கொண்டிருந்தார். நான் பேருந்தில் ஏறியதும் அவர் அருகிலேயே நின்று கொண்டேன்.
நடத்துநர் : எங்கம்மா?????

நான் : சாய்நகர் 1 - ங்க்ணா...

அப்பெண் : நீங்க முபஷ்ஷரீனா தான ???

நான் : (சற்று ஆச்சரியத்துடனும் , தயக்கத்துடனும், மெல்லிய குரலில் ) ஆம்ம்ம்மா நீங்க ????

அப்பெண் : நீங்க Presentation Convent ல தான படிச்சீங்க ???

நான் : ஆமா ........

அப்பெண் : நீங்க 10F கிளாஸ் லீடர் தான?

நான் : ஆமா நீங்க யாருன்னு சொல்லுங்க.

அப்பெண் : ஏஞ்சலின் ஷர்மிளா தெரியுமா????

நான் : ஆங்... தெரியும். .......

அப்பெண் : நான் தான் அது.......

 நான் : ( ஹேய் நீயா, என்ன டீ எளச்சுட்ட, என்ன செய்ற, என்ன படிச்ச எங்க இருக்கீங்க , உங்க வீடும் இந்த ஏரியாலயா ???????? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ???? கல்யாணம் ஆயிருச்சா ???? ) இப்படி வழக்கமான சந்தோசங்கள், விசாரிப்புகள் எதுவுமின்றி... அதற்கு மாறாக அதிர்ச்சியுடனும் , ஆச்சரியத்துடனும்) நீங்களா? நீங்க NUN ஆயிட்டீங்களா !!!!!!!!!!!!!!!!!!!! ???????????????
 (ஆம் ..... அவள் ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக இருந்தாள்.)

கன்னியாஸ்திரி : ஆமா.

நான் : ஸ்கூல் படிக்கும்போதுலாம் சொல்லவே இல்லையே இதப்பத்தி. (ஆம் பத்தாம் வகுப்பு பயிலும் போதே கன்னியாஸ்திரி ஆவதற்கு பள்ளியில் பெயர் கொடுக்க வேண்டும். )

கன்னியாஸ்திரி : இல்லை எனக்கு அப்போ அப்படி தோணல.

நான் : ஓஹ் !

சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது...

நான் : இப்போ எங்க இருக்கீங்க.

கன்னியாஸ்திரி : St. Leos Convent இருக்குல அங்க தான்.

நான் : ம்ம்ம்ம்............ டார்த்திக் குவின் - ம் sister ஆயிட்டாளா.???
கன்னியாஸ்திரி : இல்லை அவளுக்கு marriage ஆயிருச்சு.

நான் : அவ nun ஆயிருவேன்னு சொன்னா ??

கன்னியாஸ்திரி : ஆமா சொன்னா, ஆனா அப்புறம் ஆகலை.

நான் : உங்க கூடப்பிறந்தவங்கள்லாம் ???

கன்னியாஸ்திரி : இருக்காங்களே 1 அண்ணா, 1 தங்கச்சி

நான் : நான் அதைக்கேக்கல அவங்களும் எல்லாரும் NUN ஆயிட்டாங்களா???
கன்னியாஸ்திரி : (சற்று வருத்தத்துடன் ) இல்லை குடும்பத்துக்கு ஒருத்தர் போதுமே.

நான் : லீவு லாம் எப்போ???

கன்னியாஸ்திரி : ஓஹ் !! இருக்கே வருஷத்துக்கு 2 நாள் வீட்டுக்குப் போயிட்டு வரலாம் அப்புறம் வீட்ல யாருக்காவதும் உடம்பு சரியில்லைனா போய் பாத்துட்டு வர Permission குடுப்பாங்க.

நான் : வீட்டு விஷேஷத்துக்குலாம் ???

கன்னியாஸ்திரி : இல்ல இல்ல அதுக்குலாம் Permission கிடையாது. சொந்த அண்ணன் , தங்கச்சி கல்யாணத்துக்குலாம் போக கூடாது. (சொல்லும் போதே மூஞ்சி சின்னதாயிருச்சு )

நான் : கக்ஷ்ட்டமாயில்லையா???

கன்னியாஸ்திரி : (சற்று யோசித்தவளாக) எந்த வாழ்க்கைல தான் கஷ்ட்டம் இல்லை???

நான் : இல்லை எங்களோட கஷ்ட்டத்துக்கும் , உங்களோட கஷ்ட்டத்துக்கும் வித்தியாசம் இருக்குல? parents, relatives எல்லாரையும் விட்டுட்டு போய் இருக்கீங்கல்ல?

கன்னியாஸ்திரி : (வருத்தம் கலந்த புன்னைகை)

நான் : சரி இங்க வந்தா எங்க வீட்டுக்கு வாங்க next stopping தான் எங்க வீடு.

கன்னியாஸ்திரி : try பண்றேன், இங்க எங்கயும் வெளிய யார் வீட்டுக்கும் போக கூடாது, Convent rules.

நான் : It’s ok, bye. என்னோட stopping வந்துருச்சு.

நடத்துநர் : சாய்நகர் இறங்குதாமா????

நான் : ஆங்...

பேருந்தை விட்டு கீழிறங்கி வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் பள்ளி நினைவுகள்.... ஏஞ்சலின் ஷர்மிளா - ஒரே bench - ல் அமர்ந்திருந்த சற்று அமைதியான பெண் எனினும் பள்ளிப்பருவத்திற்கே உரிய உரிமை அழைப்புகள் வாடி, போடி ........ இப்பொழுது ஏதோ ஸ்கூல்ல science sister ஐயும், H.M. Sister ஐயும் பார்த்த effect, அவ்வளவு மரியாதை அவளுடன் நடந்த உரையாடலில்.

எனினும் இடையிடையே தோன்றிய அவளது சோகப் பார்வைகள் இதுனாலயெல்லாம் தான் அல்லாஹ் இஸ்லாத்துல துறவறத்தை அனுமதிக்கல என்பதை சொல்லாமல் சொல்லிச்சு.
அப்பொழுது நினைவுக்கு வந்த சில நபி மொழிகள் :

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு!
(இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!" என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!" என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!" என்றார்கள். "அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி(ஸல்) அவர்களின் சலுகைகளை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!" என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(புகாரி : 1975. Volume : 2 Book : 30.)

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான்(ரலி) அவர்கள் அபுதர்தா(ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா(ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அதற்கு உம்முத் தர்தா, 'உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்' என்றார். பிறகு, அபுத்தர்தா(ரலி) அவர்கள் வந்து சல்மான்(ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு 'சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்)  நோன்பு நோற்றுள்ளேன்' என்றார்கள். அபுத்தர்தா அதற்கு சல்மான்(ரலி) அவர்கள், 'நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்' என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா(ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்' என்றார்கள். எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்' என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான்(ரலி) அவர்கள் 'இப்போது எழுங்கள்' என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள் அபுத்தர்தா(ரலி) அவர்களிடம், 'உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்' என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'சல்மான் உண்மையே சொன்னார்' என்றார்கள். அபூ ஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ(ரலி)
அவர்களுக்கு 'வஹ்புல் கைர்' என்றும் பெயர் சொல்லப்படுகிறது.
(புகாரி : 6139.  Volume :6 Book :78)

// நான் : வீட்டு விஷேஷத்துக்குலாம் ??? கன்னியாஸ்திரி : இல்ல இல்ல அதுக்குலாம் Permission கிடையாது. சொந்த அண்ணன் , தங்கச்சி கல்யாணத்துக்குலாம் போக கூடாது. (சொல்லும் போதே மூஞ்சி சின்னதாயிருச்சு ) ////

ஒரு திருமணத்தை பார்ப்பதனால் மட்டும் தான் தடுமாற்றம் ஏற்படுமா??? இவ்வளவு பலகீனமான உள்ளத்துடன் எப்படி ஒருவர் ஆயுள் முழுவதும் துறவறம் மேற்கொள்ள முடியும்????? ஓவ்வொரு நாளும் பத்திரிக்கை செய்திகளில் காணக்கிடைக்கிறதே “ ......... இளம்பெண்ணை கற்பழித்த கொடூரம் போன்றவை???

துறவரம் குறித்து இஸ்லாம் கூறுவது :

. “  இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. “         
( அல்குர்ஆன் 24:32.)

வசதியில்லாதவர்களுக்குக் கூட திருமணம் செய்ய உதவி செய்யச் சொல்லி தூண்டும் இஸ்லாம்.

இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். ( அல்குர்ஆன் 24:32.)

திருமணம் செய்ய இயலாதவர்களை நோன்பு நோற்கச் சொல்லும் மார்க்கம் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(புகாரி : 1905.  Volume :2 Book :30)

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார் நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!)  தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: ''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள்.

(புகாரி : 5065. Volume : 5 Book : 67)

துறவறம் மேற்கொள்ள இஸ்லாத்தில் நேரடி மறுப்பு : -

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள்.
(புகாரி : 5073.  Volume :5 Book :67)

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது,  அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று
சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை
 கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
(புகாரி : 5063. Volume :5 Book :67)

இது ஒரு மதத்தை உயர்வாகக் காட்டிக்கொள்வதற்காகவோ அல்லது பிற மதத்தினரை புண்படுத்தவோ சொல்லப்படும் கருத்து அல்ல. மனித இயல்யுகளையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டேயல்லாமல் எப்படி ஒரு மார்க்கம் முழுமை அடைய முடியும்???

"திருமணம் எனது வழிமுறை எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்பது நபிமொழி.

இஸ்லாம் மட்டுமே மனிதர்களின் உணர்வுகளுக்கேற்ப, அவனின் உணர்வுகளை மதித்து இறைவனால் அருளப்பெற்ற மார்க்கம் என்பதற்கு இதைவிட வேற என்ன அத்தாட்சி வேண்டும்?

இறைவா! எங்கள் அனவரையும் நேர்வழியில் செலுத்துவாயாக!!!

- முபி ஜன்னத்.

குறிப்பு : இது சகோதரி முபஷ்ஷரீனா பிந்த் செய்யத் முஹம்மது ( முபி ஜன்னத் ) அவர்கள் எழுதிய பதிவாகும்....


சனி, செப்டம்பர் 14, 2013

விநாயகர் ஊர்வலங்களும்... என் மன வேதனையையும்...

 
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3, அதில் பாலவாக்கம் கடற்கரையும் ஒன்று...
நேற்று என் மகனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பாலவாக்கம் பீச் வழியா போகையில் ஏராளமான போலிஸ்கள் பாதுகாப்பிற்கு நின்றார்கள்... முதலில் என்னவென்று எனக்கு புரியவில்லை, அதன்பின் விசாரிக்கையில் தான் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு நடக்கிறது என்று கூறினார்கள். மேலும் விசாரிக்கையில்  சிலைகளை கரைக்க சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 3 தானாம்... அதில் பாலவாக்கமும் ஒன்று என்று கூறினார்கள்.

அதேபோல், இன்று ஈ.சி.ஆர் ரோட்டில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுகொண்டு இருக்கையில், நிறைய விநாயகர் சிலைகளை வண்டியில் எடுத்துக்கொண்டு சென்றார்கள்... ஒவ்வொரு வண்டியிலும் ஒரு போலிஸ் உட்கார்ந்து இருந்தார்... அதைத்தவிர நிறைய போலிஸ் வாகனங்கள் முன்னும், பின்னும்... அதை பார்த்ததும் மனம் வேதனையாக இருந்தது...

இந்துக்களின் விழாக்களில் இதுவும் ஒன்று... அதற்கு இவ்வளவு பாதுகாப்பும், பந்தோபஸ்தும் தேவையா...?? என்னமோ நடக்கக்கூடாதது நடந்து கொண்டு இருப்பது போல் இருந்தது அதைப்பார்த்ததும்... 
அமைதியாக நடந்து கொண்டு இருந்த இந்த ஊர்வலங்களை வன்முறையாக மாற்றிய பெருமை இந்து முண்ணனி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபர்களையே சாரும்... பெரும்பான்மை இந்து சகோக்கள் அமைதியாக போகும்பொழுது, இந்த கயவர்கள் ஊடுருவி பள்ளிவாசல்கள் அருகில் செல்லும் பொழுது கெட்ட வார்த்தை பேசுவது, வெடி வெடிப்பது என்று செய்து வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கிறார்கள்... 
அதேபோல் விநாயகர் ஊர்வலங்களுக்கு பர்மிஷன் கேட்கும் பொழுது வேண்டுமென்றே பள்ளிவாசல்கள் இருக்கும் வழித்தடங்களில் செல்ல அனுமதி கேட்பது. ஏன் பள்ளிவாசல் இருக்கும் வழித்தடங்கள்??? இதில் இருந்தே இவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறதல்லவா? நல்ல மனிதர்கள் பிரச்சனை வராமல் இருப்பதையே விரும்புவார்கள்.. ஆனால் இவர்களோ பிரச்சனை வளர்க்கும் அனைத்தையும் திட்டமிட்டு செய்கிறார்கள். இந்து சகோக்கள் இவர்களின் தீய நோக்கை புரிந்து கொண்டு, இவர்களை புறக்கணித்து வரும் காலங்களில் அமைதியான விநாயகர் ஊர்வலங்கள் நடக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்...

ஆர்.எஸ்.எஸ் தம்பிகளா...
நீங்க நினைக்கலாம் இந்துக்களையும், முஸ்லிம்களையும் இதை வைத்து பிரித்து குளிர்காயலாம்னு...
ஒரு நாள் வரும்...
அன்னைக்கு இந்த இரண்டு தரப்பும் ஒன்னு சேர்ந்து உங்கள ஓடஓட விரட்டும்...
அதன் பின்...
விநாயகர் ஊர்வலங்களில் போலிஸ் இல்லாத நாள் ஒன்றும் வரும்... வியாழன், செப்டம்பர் 05, 2013

மரணத் தருவாயில் ஒரு உயிர் - உதவமுடியுமா???

கடந்த 21.08.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில், வேலூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரின் மூன்று மகன்களுக்கும் இரண்டு கிட்னிகளும் செயல்இழுந்து, அதில் முதல் இருவருக்கும் பலத்த கஷ்டங்களுக்கு இடையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதையும். 17 வயதே ஆன கடைசி மகன் யாசின் அவர்கள் 400 டயாலிஸ்களை கடந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருப்பதையும் விளக்கி கட்டுரை வந்திருந்தது.
கட்டுரையை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் : http://vadaibajji.blogspot.in/2013/09/blog-post_5.html

அதை நானும் படித்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.. வருத்தம் மட்டும் பட்டுவிட்டு மறந்துவிட்டேன். ஆனால், அந்த கட்டுரை வந்து ஒரு வாரம் கழித்து பதிவர் ஹுஸைனம்மா அவர்கள் எங்கள் குழுமத்திற்கு பின்வரும் இரண்டு வரிகளை எழுதி அதன் கீழ் அந்த கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து இருந்தார்கள்...

// அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வார விகடனில் வந்திருக்கு. ஏதாவது செய்யமுடியுமா?  பள்ளிவாசல்களின் மூலம் தர்மம் பெற்றே இதுவரை சமாளிக்கிறார்களாம்.
//

மெயில் இழை மெல்ல சூடுபிடித்தது. சுவனப்பிரியன் தான் ஒரு தொகை தருவதாக ஆரம்பித்தார். அதன்பின் ஒரு பதிவர் சகோதரி 10,000 தருவதாக கூறினார். கூறியதோடு அல்லாமல் நான் அவர்களிடம் நேரடியாகத்தான் சென்று கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.     நான் நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிட்றேன் ன்னு எவ்வளவோ சொல்லியும் அவர் நான் போயே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். மேலும் அவர் 10,000 தருவதாக கூறியதும் சற்றே ஆர்வம் பிறந்தது. உடனே எங்கள் பேஸ்புக் குழுமத்தில் ஸ்டேடஸ் போட்டோம். எல்லா புகழும் இறைவனுக்கே. வரிசையாக சில சகோக்கள் பணம் தருவதாக அறிவித்தார்கள்.... மொத்தம் 19,000 சேர்ந்தது, அத்துடன் இஸ்லாமிய பதிவர்கள் மற்ற சகோதரர்களுடன் இணைந்து நடத்தும் எங்கள் குழுமத்தின் டிரஸ்டில் இருந்து 6,000(இது விநோதினிக்காக வசூல் செய்தது, மொத்தம் 11,000 வசூல் செய்தோம், கொடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார், ஆகவே வேறு யாருக்கும் கொடுக்கலாம் என்று ஹோல்ட் செய்திருந்தோம்) சேர்த்து மொத்தம் 25,000 கொடுப்பது என்று முடிவு செய்து கடந்த திங்கள் அன்று அவர்களை பார்க்க சென்னை செம்மஞ்சேரியில் இருக்கும் சுனாமி குடியிருப்புக்கு நான் மற்றும் சகோதரர் பாசில் இருவரும் சென்றோம்.


                                               (3 சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை)

(வெள்ளை சட்டை போட்டு இருப்பவர் 2வது பையன், காபிகலர் சட்டை போட்டிருப்பவர் முதல் பையன், கீழே அமர்ந்து இருப்பவர் தான் யாஸின், சிகிச்சைக்கு காத்திருப்பவர்)

அந்த குடும்பத்தாரின் நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.10 X 10 வீட்டில் அந்த மூன்று பையன்கள் மற்றும் அவனின் பெற்றோர்கள் வசிக்கிறார்கள். மிகுந்த ஏழ்மையான சூழல். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த அண்ணன்கள் இருவரும் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் யாஸினின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது சகோஸ். எனக்கு உண்மையிலே ரொம்ப பயமா இருக்கு. அந்த பையனுக்கு அரசு மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறார்கள். கிட்னி பெறுவோர் லிஸ்டிலும் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடம். ஆக இவருக்கு ஆபரேஷன் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவருக்கு ஒரு விதமான வைரஸ் தாக்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன் அந்த வைரஸை முற்றிலும் அழித்தால் மட்டுமே அறுவை சிகிச்சை வெற்றி பெறும். இல்லாவிட்டால் அந்த வைரஸ் புதிய கிட்னியையும் செயல் இழக்கச் செய்துவிடும். இதான் இப்ப பிரச்சனை.

இந்த வைரஸை ஒழிக்க வாரம் ஒரு ஊசி வீதம் 6 மாதங்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். ஒரு ஊசியின் விலை 15,000 ரூபாய். ஆறு மாதம் என்பது அதிக பட்சம். சில சமயங்களில் 3 மாதங்களில் கூட சரி ஆகலாம். எதுவும் நம் கையில் இல்லை. இந்த ஊசி போட பணம் இல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். யாசின் மிகவும் ஒல்லியாகவும், வீக்காகவும் இருக்கிறார். அவரை பார்க்கும் சக்தி நிஜமாவே எங்களுக்கு இல்லை. என்னால் தொடர்ந்து அவரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் இடை இடையில் அவர் எங்களைப் பார்த்த பார்வை... அல்லாஹ்... எப்படி சொல்றதுன்னு தெரியல.. எதாவது செய்ங்க பாய் னு சொல்ற மாதிரி இருந்துச்சு...

இறுதியாக கிளம்பும் முன்... கடந்த மார்ச் மாதம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூத்த அண்ணன்(இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்திருக்கிறார்), தனது பழைய பயோட்டேட்டாவை எடுத்து படபடப்பாக என்னிடம் கொடுத்துக் கொண்டே எதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க பாய். என் தம்பிய நான் காப்பத்தனும்னு சொல்லைல என் ஈரக்கொலை அப்டியே மேல தூக்கிறுச்சு. எப்படி ரீஆக்ட் பண்றதுன்னே தெரியல. ஸ்தம்பிச்சிட்டோம். அதன் பின் மெல்ல சுதாரிச்சி இப்ப தான் உங்களுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சி இருக்கு, இப்ப எந்த ரிஸ்கும் எடுக்காதீங்க தம்பி, மறுபடியும் உங்களுக்கு பிரச்சனைன்னா டபுள் வொர்க் ஆகிடும். நீங்க ரெஸ்ட் எடுங்க, இப்பதைக்கு இந்த பணத்த வச்சி 2 வாரம் ஊசிய போடுங்க. இறைவன நம்பி இறங்குங்க, இவ்வளவு காப்பாத்தின அவன் உங்கள் தம்பியையும் காப்பாத்துவான். இன்னும் சில சகோதரர்கள் தர்றேன்னு சொல்லி இருக்காங்க, வந்ததும் அதையும் அனுப்புறோம், எல்லார்கிட்டையும் சொல்றோம். உங்களுக்கு தேவையான பணம் நிச்சயம் கிடைக்கும்னு சொல்லிட்டு விடை பெற்றோம்.

சகோதர்களே, நண்பர்களே...

உங்களால் முடிந்தால், முடிந்த அளவு இவர்களுக்கு உதவுங்கள். வாழ வேண்டிய பையன். 17 வயது தான் ஆகிறது. நமது சிறு சிறு உதவிகள் பெரும் வெள்ளமாய் அந்த குடும்பத்திற்கு உதவட்டும். இத்துடன் அவர்களின் போன் நம்பர் மற்றும் பேங்க் டீடெய்ல் இணைத்துள்ளேன்.

இஸ்லாமிய சகோஸ்...

உங்களின் 2.5 % ஜகாத் பணத்தை இவர்களுக்காக செலவழியுங்கள். ஜகாத் பெற தகுதி உடையவர்கள் லிஸ்டில் இவர்கள் நிச்சயம் வருவார்கள். இதற்கு நான் சாட்சி. உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்கள் ஊர் செல்வந்தர்களிடம் சொல்லி வாங்கி கொடுங்கள்... சிம்பிள் சகோஸ்... ஒரு ஊசி செலவை நான் வசூலிப்பேன் என்று உறுதி எடுத்து செய்யுங்கள்...நிச்சயம் உங்களால் முடியும்.. முடிந்த அளவு அவர்களின் சுமையை குறைக்க முயற்சிப்போம். நம்மால் இதைச் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

இறுதியாக :


2 பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்தாலே நம்மால் சமாளிக்க முடிவதில்லை. 3 பிள்ளைகளுக்கும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக அலைந்து திரிந்து போராடும் அந்த ஏழைப்பெற்றோர்களையும், இவர்களுக்கு பல விதங்களில் உதவிய அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், இவர்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையையும், பண உதவி செய்த மற்றும் இறைவனிடம் வேண்டிய அனைத்து நல் உள்ளங்களையும் நினைக்கையில் மனிதம் சாகவில்லை என்பது நிரூபணமாகிறது.

இறைவா!! இவர்கள் அனைவருக்கும் உன் அருளை பரிபூரணமாக இறக்கு. மேலும் நீண்ட ஆயுளை கொடுத்து இன்னும் பலருக்கு உதவக் கூடியவர்களாக இவர்களை ஆக்கி வை. எதற்கும் சக்தியற்ற அற்பற்களாய் இருக்கிறோம் இறைவா. எங்களை கை விட்டு விடாதே. யாசினுக்கு நீண்ட ஆயுளைக்கொடு. ஆமீன்.


அட்ரஸ் :

Mr.Abdul Majeeth,
No.1293, Tsunami Kudiiruppu,
Semmanjeri, Cholinganallur, Chennai
Mobile : 80983 74060

பேங்க் டீடெய்ல்ஸ் :

K.N. Abdul Majeeth,
AC No : 800210110004315
Bank of India,

Mylapore Branch, 
Chennai.சிறுகச் சிறுக செத்துப் பிழைத்தோம்...

குறிப்பு : இந்த போஸ்ட் ஆனந்த விகடனில் இருந்து அப்படியே காப்பி செய்யப்பட்டது... இது தொடர்பான மற்றொரு போஸ்டிற்கு மேலதிக விளக்கம் தரவே இங்கு பதியப் படுகிறது...

வேலூர் அருகே சிறு கிராமத்தில் மகிழ்ச்சியாக வசித்தஏழைக் குடும்பம் ஒன்றை, 'அல்போர்ட் சிண்ட் ரோம்’ என்ற மரபுவழி சிறுநீரகக் குறைபாடு, சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஒண்டுக்குடித்தனத்தில் சுருட்டிப் போட்டுள்ளது!
வேலூர் மாவட்டம், அகரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத்- ரெஜினா பேகம் தம்பதிக்கு... அஸ்லாம் பாஷா, அன்வர், யாசின் என்று மூன்று மகன்கள். மூன்று பேருமே 'அல் போர்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் சீறுநீரகக் குறைபாட்டுக்கு உள்ளாகியி ருக்கிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூவரும் பிழைக்க முடியும் என்கிற நிலையில், மூத்த மகன்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சையை பெரும்பாடுபட்டு முடித்துவிட்டார் அப்துல் மஜீத். இப்போது, கடைசி மகனின் சிறுநீரக சிகிச் சைக்காகக் காத்திருக்கிறார். மகன்கள் பிழைத்துக்கிடப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு நிமிடத்தையும்  செலவழிக்கும் அப்துல் மஜீத், தங்கள் குடும்பத்தைப் பற்றிய சோகக்கதையைச் சொல்லத்  தொடங்கினார். 
''கிராமத்தில் காய்கறி வியாபாரம் பார்த்தேன். சைக்கிள்ல சுத்திச் சுத்தி வித்தா... ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபா வரும். கஷ்ட ஜீவனம். ஆனாலும்,  பசங்களை நல்லபடியா படிக்கவெச்சேன். மூணு வருஷம் முன்னாடி திடீர்னு ரெண்டாவது பையன் அன்வ ருக்கு உடம்புக்கு சுகம் இல் லாமப்போச்சு. கைகால், முகம் எல்லாம் வீங்கிரும். ரத்த ரத்தமா வாந்தி எடுப்பான். அப்பப்போ மயங்கி விழுவான். 'வயித்துல உப்பு அதிகமாகிருச்சு. சென்னையில இருக்கிற பெரிய கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைச் சுட்டுப் போங்க. பையனைக் காப்பாத்திடலாம்’னு சொன் னாங்க.
சென்னைக்கு அழைச்சுட்டு வந்தா, 'பையனுக்கு ரெண்டு கிட்னியும் செயல் இழந்திருச்சு. கிட்னி மாத்துனாதான் பிழைக்கவைக்க முடியும்’னு சொல்லிட்டாங்க. தொடர்ந்து ஆறு மாசம், வாரம் ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணோம். அப்புறம் என்னோட கிட்னியை எடுத்து அன்வருக்குப் பொருத்தினாங்க!'' என்று சட்டை யைத் தூக்கி, தான் அறுவைசிகிச்சை செய்துகொண்ட அடையாளத்தைக் காட்டிவிட்டுத் தொடர்கிறார்.
''அன்வருக்குச் சிகிச்சை செய்த  செலவைச் சமாளிக்கிறதுக்காக, மூத்தவன் திருப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்தான். அன்வருக்கு கிட்னி பொருத்துன பிறகு, நம்ம குடும்பத்தைப் பிடிச்ச கஷ்டம் வில குச்சுனு நினைச்சு கொஞ்சம் நிம்மதி ஆனோம். ஆனா, அப்பத்தான் இடி மேல இடி விழுந்திச்சு!'' என்று அப்துல் நிறுத்த, அவருடைய மூத்த மகன் அஸ்லாம் பாஷா தொடர்கிறார்.
''தம்பியைப் பார்த்துட்டு வரலாம்னு திருப்பூர்லேர்ந்து சென் னைக்கு ரயில்ல வந்துட்டு இருந் தேன். ஆனா, சென்னைக்கு உயிரோட போய்ச் சேருவோமானு  நினைக்கிற மாதிரி, ரயில்ல என் நிலைமை ரொம்ப மோசமாயிருச்சு. பரிசோதிச்சுப் பார்த்தா, எனக்கும் அதே பிரச்னை. உடனே சிறுநீரகத்தை மாத்தணும்னு சொல்லிட்டாங்க. 'இது ஏதோ பரம்பரை வியாதி மாதிரி தெரியுது. எதுக்கும் உங்க தம்பியையும் பரிசோதிச்சுப் பார்த்துடலாம்’னு சொல்லி, யாசி னுக்கும் டெஸ்ட் பண்ணாங்க. அவனுக்கும் அதே பிரச்னை. அடி மேல அடி!  இன்னமே சொந்தக் கிராமத்துல குடியிருக்க முடியாதுனு முடிவு பண்ணி, செம்மஞ்சேரி சுனாமி குடி யிருப்புல ஆயிரம் ரூபா வாடகைக்கு குடிவந்தோம். ஆனா, அந்த வீட்டுக்கு வேஸ்ட்டா வாடகைக் கொடுத்துட்டு இருக் கோம். மொத்தக் குடும்பமும் ஆஸ்பத்திரியில தானே தங்கியிருக்கோம். எப்ப ஊருக்குப் போவோம்னு இப்போ வரைக்கும் தெரியவே இல்லை!'' என்று வெறுமையாகச் சிரிக்கும் அஸ்லாம், பி.ஏ., பொருளாதாரப் படிப்பில்  கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்தவர். 
மகன்களின் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார் ரெஜினா பேகம். ''அஸ்லாமுக்கு என் கிட்னியை எடுத்துக்கங்கனு சொன்னேன். ஆனா, 'ஒரே குடும்பத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் சிறுநீரக தானம் செய்ய முடி யாது’னு சட்டமே இருக்காமே! அதனால அஸ்லாம், யாசின் ரெண்டு பேருக்கும் சிறு நீரக தானத்துக்காக பதிஞ்சுவெச்சுட்டு, டயாலிசிஸ் பண்ணிட்டே இருந்தோம். இந்த டயாலிசிஸ், மருந்து மாத்திரை செலவுகளுக்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. வாரத்துக்கு ரெண்டு தடவை டயா லிசிஸ் பண்ணணும். பெரியவனுக்கு ஒரு தடவை பண்ண 900 ரூபாய். சின்னவனுக்கு 1,770 ரூபாய். இது தவிர, ஒரு ஊசி 500 ரூபாய். எட்டு டயாலிசிஸுக்கு ஒரு தடவை மாத்துற கிட் 1,100 ரூபாய். மூணு மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு யூனிட் ரத்தம்னு டயாலி சிஸுக்கே இதுவரைக்கும் ஏழெட்டு லட்சம் செலவாயிட்டு. அவ்வளவு செலவையும் பல பேரோட நிதி உதவி மூலமாத்தான் சமாளிச் சோம்!'' என்று நெகிழ்கிறார் ரெஜினா.
சென்ற மார்ச் மாதம் மூளைச் சாவுஅடைந்த குருசாமி என்பவரின் கிட்னியை அஸ்லா முக்குப் பொருத்தியுள்ளார்கள். தற்போது யாசின் மட்டும் தனக்கான அறுவைசிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ''2010-ல இருந்து நானும் அண்ணனும் டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கோம். அன்வருக்கு 46 டயாலிசிஸுக்கு அப்புறம் கிட்னி கிடைச்சிருச்சு. பெரிய அண்ணனுக்கு 250-ஐ தாண்டி ஓடுச்சு. எனக்கு வெற்றிகரமா 400 டயாலிசிஸ் தாண்டி ஓடிட்டு இருக்கு!'' என்று சொல்லும் யாசின், மேலும் தொடர்ந்தார்.
''கிட்னி தானம் கேட்டுப் பதிவுசெய்தவர் கள்ல  சீனியாரிட்டி அடிப்படையில் நான் தான் ஃபர்ஸ்ட். அதனால எப்பவோ எனக்கு சிறுநீரகம் கிடைச்சிருக்கும். ஆனா, திடீர்னு என்னை மஞ்சள் காமாலை தாக்கிட்டு.  எங்க குடும்பத்துல யாருக்குமே மஞ்சள் காமாலை வந்தது இல்லை. ஒரு தடவை தனியார் ஆஸ்பத்திரியில டயாலிசிஸ் பண்றப்ப, சரியா சுத்தம் பண்ணாத உபகரணங்களைப் பயன்படுத்தி இருக்காங்க. அதனால எனக்கு வைரஸ் கிருமி தொத்திட்டு. என் உடம்புல அந்தக் கிருமி பரவி 20 லட்சமா பெருகிடுச் சாம். அதனால, ஒவ்வொரு தடவை டயாலிசிஸ் பண்றப் பவும் அந்தக் கிருமிங்க அழியுறதுக்காக, ஒரு ஊசி போட்டுட்டு இருக்காங்க. அதோட விலை, வெளி மார்க்கெட்ல ஒரு லட்சம் ரூபாய். அந்தக் கிருமிங்களை ஒட்டுமொத்தமா அழிக்காம, சிறுநீரக மாற்று ஆபரேஷன் பண்றது வீண் வேலை. அந்தக் கிருமி மொத்தமா அழியறதுக்காகக் காத்துருக்கோம். எல்லா சங்க டத்தையும் சமாளிச்சுட்டேன். ஆனா, ஒரு நாளைக்கு 400 மில்லிக்கு மேல தண்ணி குடிக்கக் கூடாதுங்றதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. பால் 100 மில்லி, சாதத்துல 200 மில்லி, தண்ணீர் 100 மில்லி... இதுக்கு மேல என் உடம்புல தண்ணிச் சத்து சேரக் கூடாதாம். இந்த அளவுல, கொஞ்சம் அதிகரிச்சாலும்  மூச்சுத்திணறல் வந்துடும். மத்தவங்க தண்ணி குடிக்கிறதைப் பார்த்தா நான் வருத்தப்படுவேன்னு நினைச்சு, எங்க வீட்ல எல்லாரும் எனக்குத் தெரியாம மறைஞ்சு மறைஞ்சு தான் தண்ணி குடிக்கிறாங்க. இதுக்காகவே எனக்கு சீக்கிரம் ஆபரேஷன் நடந்தா நல்லா இருக்கும்னு தோணுது.
'இதுக்கான செலவை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க’னு கேட்கிறீங்களா? ஒவ்வொரு பள்ளிவாசலாப் போய், மருத்துவச் சான்றிதழ், எங்க ஊர் பள்ளிவாசல்ல கொடுத்த கடிதங்களைக் காட்டி உதவி கேட்போம். அவங்க எங்களை ஒவ்வொருவெள்ளிக் கிழமைக்கும் வரச் சொல்வாங்க. மைக்குல, 'விருப்பம் இருக்கிறவங்க இந்தக் குடும்பத்துக்கு உதவலாம்’னு அறிவிப்பாங்க. துண்டேந்தி நிப்போம். தொழுகை முடிச்சுட்டுப் போறவங்க, கையில இருக்கிறதைக் கொடுப்பாங்க. அந்தப் பணமும், நல்ல மனசுள்ள டாக்டர்களோட உதவியும், எங்க சமுதாய மக்களோட கருணையும்தான் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்திட்டு இருக்கு!'' என்று முடிக்கிறார் யாசின்.
அறுவைசிகிச்சை முடிந்த மூத்த மகன்கள் இரண்டு பேரையும் தொடர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது, சிறுநீரக தானம் தந்த இவரும் சோதனை செய்துகொள்வது, கடைசி மகன் யாசினை டயாலிசிஸுக்கு அழைத்துச் செல்வது என அப்துல் மஜீத்துக்கு உட்காரவே நேரம் இல்லை.
''ஊர்ல இருக்கிற வீட்டைத் திறந்து மூணு வருஷமாவுது. ஆதார் அடையாள அட்டை எடுக்க குடும்பத்தோட வர ணும்னு சொல்லியிருந்தாங்க. மூணு வருஷம் கழிச்சு எல்லாரும் போனோம். செடியும்கொடி யுமா பாழடைஞ்ச வீட்டைப் பார்த்துட்டு, பசங்க அழ ஆரம்பிச்சுட்டாங்க. விளையாடுன இடம், படிச்ச பள்ளிக்கூடம்னு அங்கே இங்கே உட்காரவெச்சுக் கூட்டிட்டு வந்தேன். இப்போ ரம்ஜானுக்காக ஊருக்குப் போகலாமானு கேட்டேன்.  'இன்னொரு தடவை அந்த வீட்டை அப்படிப் பார்க்குற தைரியம் எங்களுக்கு இல்லை வாப்பா’னு பசங்க சொல்லிட் டாங்க. இந்த வருஷ ரம்ஜானும் ஆஸ்பத்திரியிலதான் போச்சு. அடுத்த வருஷ ரம்ஜானையாச் சும் ஊர்ல கொண்டாடுவோம்னு நம்புறோம். இப்பெல்லாம் நம்பிக்கை மட்டும்தான் எங்களோட சொத்து!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் அப்துல் மஜீத்.
அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மௌனமாக விடைபெற்றேன்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் சிறுநீரகயியல் துறைத் தலைவர், டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், அப்துல் மஜீத் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னையின் பின்னணியை விவரித்தார்...  
''சிறுநீரகச் செயலிழப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அக்யூட் கிட்னி ஃபெயிலியர். இது, டயாலிசிஸ் மூலமே நாளடைவில் சரியாகிவிடும். அடுத்து க்ரானிக் கிட்னி ஃபெயிலியர். இதற்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் ஒரே வழி. ஆனால், இவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து டயாலிசிஸ் செய்தபடியும் ஆயுளைக் கழிக்கலாம். பொதுவாக உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வலி நிவாரண மாத்தி ரைகளை அதிகம் உட்கொள்வது, சிறுநீர் பாதை யிலோ சிறுநீரகங்களிலோ கற்கள் உருவாவது போன்றவற்றால் பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். இதற்கு நம்முடைய உணவு முறை களும் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டதும் ஒரு காரணம். அல்போர்ட் சிண்ட்ரோம் எனும் தாய்வழி மரபணு மூலமாக வரும் சிறுநீரகக் குறைபாட்டால் தான் அப்துல் மஜீத்தின் மகன்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். செவித்திறன் குறைவும் பார்வைக் குறைபாடும் இதன் ஆரம்ப அறிகுறிகள். அதைத் தொடர்ந்து சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும்.
இதுபோன்ற அறிகுறி  களோடு மட்டும்தான் க்ரானிக் கிட்னி ஃபெயி லியர் வரும் என்று சொல்ல முடியாது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் அனை வருமே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!''


திங்கள், செப்டம்பர் 02, 2013

மேன்மக்கள் மேன்மக்களே...


அருமைச் சகோதரர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் 31/08/2013 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :
நான் ஜூலை 10 அன்று பேஸ்புக்கில் போட்ட ஸ்டேடஸ் :

என் ஸ்டேடஸின் தொடர்ச்சி :சிறு விளக்கம் :

பண்பாளர்களுக்கும், நேர்மையாளர்களுக்கும் இந்த ரெண்டு ஸ்டேடஸ் பார்த்தாலே வித்தியாசம் புரியும்... இருந்தாலும் சிறு விளக்கம் கொடுத்தால் நலம் என்று எண்ணுகிறேன்....

சகோ  செந்தில் அவர்களே...

உங்களுக்கு விழும் ஓட்டுக்கள் அனைத்தும் சாப்ட்வேரில் கோல் மால் பண்ணி விழும் ஓட்டுக்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்... ஓட்டு விஷயத்தில் உங்களின் ஒரிஜினல் கெப்பாசிட்டி 20 கூட இல்லை என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்...

உங்களுக்கு விழும் ஓட்டு எல்லாம் தமிழ்மணத்தின் ஓட்டு சிஸ்டத்தை சாப்ட்வேரால் மாற்றி போடப்படும் கள்ள ஓட்டுக்கள் என்பதை நீங்களும், உங்களுக்காக ஓட்டிடுபவர்களும் நன்றாகவே அறிவீர்கள்.... :)

ஒரு சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்....

நீங்கள் பின்பற்றும் அதே வழிமுறையை பின்பற்றி என்னால் 500 ஓட்டு போட முடியும்...
ஆனாலும் செய்ய மாட்டோம்...
ஏனெனில்....
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....

கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்... கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு.. கோபம் என்பது இயலாமையின் அல்லது தோல்வியின் வெளிப்பாடு...

இறுதியாக ஒரு விஷயம்....
இது குரான் சொன்னது இல்லை.... 
திருவள்ளுவர் சொன்னது...
கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்....

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
.

உங்களைப் போன்று தரம் கெட்டு எழுதும் சிலர் இருப்பதால்.. ஆன்றோர்களின் சபையில் சில நேரங்களில் நான் ஒரு பிளாக்கர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள முடியவில்லை...

குறிப்பு : கெட்ட வார்த்தை பேசுறது பெரிய விஷயமே இல்லை சகோதரரே.... NHM ரைட்டர் இன்ஸ்டால் பண்ணிட்டு யாரு "po... ru.... " என்று அடிச்சாலும் நீங்க சொன்ன வார்த்தைகள் வரும்... Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters